வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (15/06/2018)

கடைசி தொடர்பு:16:44 (15/06/2018)

மராட்டிய சிறுவர்களுக்கு நடந்த கொடுமை! கொந்தளித்த வைரமுத்து

மகாராஷ்ட்ராவில் கிணற்றில் குளித்ததற்காக இரண்டு சிறுவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுவர்கள்
 

மகாராஷ்ட்ராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள வகாதி என்னும் கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வகாதி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் குளித்துள்ளனர். ஒரு சிறுவனுக்கு வயது 14 மற்றொரு சிறுவனுக்கு வயது 8. அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வர் ஜோஷி மற்றும் லோஹர் என்பவர்கள் கிணற்றில் குளித்ததற்காக அந்த இரண்டு சிறுவர்களின் ஆடைகளைக் கழட்டி, கடுமையாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர். அந்தச் சிறுவர்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடித்தவர்கள் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. `பட்டியலின சிறுவர்கள் என்பதாலேயே இவர்கள் இப்படி, காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்’ என்று ஊர் மக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. மேலும், சிறுவர்களின் ஆடைகள் கழற்றப்பட்டு, அடித்துத் துன்புறுத்தியுள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

இந்தச் சம்பவம் குறித்து ராகுல் காந்தி, ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைரமுத்து

இன்று இதுகுறித்து ட்வீட் செய்துள்ள வைரமுத்து, `மராட்டியத்தில் கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் தண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். குளிக்கவில்லையே என்று தலித்துகளை முன்பு தண்டித்தார்கள். குளிக்கிறார்களே என்று இன்று தண்டிக்கிறார்கள். தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும்’ என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார். 

குஜராத் இளைஞர்
 

இந்த வாரத்தில் மட்டும் பட்டியலின சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் இரண்டாவது தீண்டாமை சம்பவம் இது. குஜராத்தில் விலைமதிக்கத்தக்க ஷூக்களை அணிந்து வந்ததற்காக மாற்று சமூகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று 14 வயது சிறுவனை அடித்துத் துன்புறுத்தி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தது. இதே போன்று கடந்த மார்ச் மாதம் குதிரையில் சவாரி செய்ததற்காகப் பட்டியலின இளைஞர் ஒருவர் குஜராத்தில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க