வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (15/06/2018)

கடைசி தொடர்பு:20:40 (15/06/2018)

குப்பை போடுவதைத் தடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

குப்பை போடுவதைத் தடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

டெல்லியில் உள்ள குளம் ஒன்றில் குப்பை போடுவதைத் தடுத்த இளைஞர், 3 பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டார். 

இளைஞர் கொலை

டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் வசித்துவருபவர், டேனிஷ் (23). இவர், ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீஸாருக்கு நேற்று மதியம் 3 மணியளவில் தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், டேனிஷை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

டேனிஷ், தனது வீட்டுக்கு அருகில் இருந்தபோது, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், அருகிலுள்ள குளத்தில் குப்பை போடுவதைப் பார்த்திருக்கிறார். உடனடியாக அவர்களிடம் சென்று, இதுபோன்று 'குப்பைகளைக் குளத்தில் கொட்ட வேண்டாம்' என்று அறிவுறுத்தியிருக்கிறார். இதுகுறித்த பேச்சு வளர்ந்து வாக்குவாதமாகியிருக்கிறது. அப்போது குப்பையைக் கொட்டிய 3 பேர், டேனிஷைத் தாக்கியிருக்கின்றனர். டேனிஷும் அவர்களைத் திரும்பத் தாக்கியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், டேனிஷை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த டேனிஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வசீம் மற்றும் ஷாருக் ஆகிய இருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். டேனிஷ் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 3-வது நபரைப் போலீஸார் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.