`எத்தனை குடிமக்களை இழக்கப் போகிறோம்?' - ஆதங்கப்படும் ப.சிதம்பரம் | chidambaram questioned how many citizens will be lost again

வெளியிடப்பட்ட நேரம்: 08:18 (16/06/2018)

கடைசி தொடர்பு:09:02 (16/06/2018)

`எத்தனை குடிமக்களை இழக்கப் போகிறோம்?' - ஆதங்கப்படும் ப.சிதம்பரம்

பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புஹாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, `இன்னும் எத்தனை ஜவான்களையும் சாதாரண குடிமக்களையும் இழக்கப் போகிறோம்?' என கேள்வி எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம். 

 ப.சிதம்பரம்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், `ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சுஜாத் புஹாரி கடந்த     14-ம் தேதி, லால்சவுக் பகுதியில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட பின் காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்,  துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். புஹாரியின் உடல், அவரது சொந்த ஊரான பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரிரீ கிராமத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் போலீஸார், ஜுபைர் என்பவரைக் கைதுசெய்துள்ளனர். 

இந்நிலையில், புஹாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில், ` காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணவேண்டியவர்கள், கடமை தவறியதன் விளைவுதான் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புஹாரியின் படுகொலை. இன்னும் எத்தனை ஜவான்களையும் சாதாரண குடிமக்களையும் இழக்கப்போகிறோம்' என ஆதங்கப்பட்டுள்ளார்.