வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (16/06/2018)

கடைசி தொடர்பு:21:19 (16/06/2018)

`திரும்பவும் என்னிடம் வந்து சேருவான்’ - தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரரின் தந்தை கண்ணீர்

இந்திய ராணுவ வீரர் ஔரங்கசீப், கடந்த இரு தினங்களுக்கு முன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். `திரும்பவும் என்னிடம் அவன் வந்து சேருவான்' என அவரின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

அவுரங்சீப் ராணுவ வீரர்

காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவத்தின் 44 வது ரைபிள்ஸ் படை முகாமில் பணியாற்றியவர் ஔரங்கசீப். தீவிரவாதத்துக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன்களில் ஔரங்கசீப் முக்கியப் பங்கு வகித்தார். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சொந்த ஊருக்குச் சென்ற இவரை, தீவிரவாதிகள் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றனர். `அவர் எங்கே கொண்டு செல்லப்பட்டார்' எனத் தெரியாமல் போலீஸாரும் உறவினர்களும் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், புல்வாமா பகுதியிலிருந்து அவரைச் சடலமாக மீட்டெடுத்தனர். இதையடுத்து, அவரது சொந்த கிராமமான பூஞ்சுக்குக் கொண்டு செல்லப்பட்டு, ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்தச் சம்பவம் குறித்து ஔரங்சீப்பின் தந்தை முகமது அனீஃப் பேசும்போது, `நாட்டுக்காக எடுத்த உறுதிமொழியின்படி அவன் செயல்பட்டான். நாட்டின் பாதுகாப்புக்காக தன் உயிரைத் தியாகம் செய்துள்ளான். திரும்பவும் என்னிடம் அவன் வந்து சேருவான். தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் கண்ணீருடன். முன்னதாக, ஔரங்சீப் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாகத் தீவிரவாதிகளால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. 1.15 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவில், நீலநிற ஜீன்ஸ் அணிந்துள்ள ஔரங்சீப்பிடம், இந்திய ராணுவம் மேற்கொண்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரித்துள்ளனர்.