அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..! பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு | Four states CMs backs Arvind Kejiriwal

வெளியிடப்பட்ட நேரம்: 06:23 (17/06/2018)

கடைசி தொடர்பு:06:23 (17/06/2018)

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சென்று ஆதரவு..! பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு

பா.ஜ.க அல்லாத நான்கு மாநில முதல்வர்கள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் சென்று அவருடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், தி.மு.க எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

நான்கு மாநில முதல்வர்கள்

டெல்லி மாநில அரசில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்திப்பதற்கு அவருடைய மாளிகைக்கு சென்றார். ஆனால், அவரைச் சந்திப்பதற்கு அனில் பைஜால் நேரம் ஒதுக்கவில்லை. அதனால், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவருடைய அமைச்சர்கள் மூன்று பேர் அவருடைய மாளிகையிலேயே தொடர்ந்து ஐந்து நாள்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தநிலையில், பா.ஜ.க அல்லாத மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாவு நாயுடு ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அவர்கள், துணை நிலை ஆளுநர் மாளிகையில் சென்று அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க அனுமதி கேட்டனர்.

ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனையடுத்து, அவர்கள் நால்வரும் ஒன்றாக டெல்லியிலுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் சென்று அவருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். அதேபோல தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு துணை நிற்பதாக தெரிவித்துள்ளார்.