வெளியிடப்பட்ட நேரம்: 08:31 (17/06/2018)

கடைசி தொடர்பு:08:31 (17/06/2018)

`மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்தும் தோல்வியே' - சிவசேனா கடும் சாடல்..!

கடந்த 4 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி சென்ற வெளிநாட்டுப் பயணங்கள் தோல்வியில் முடிந்துள்ளது என சிவசேனா கடுமையாக சாட்டியுள்ளது. 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

கடந்த 14ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலவரம் குறித்து ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், இந்தியா  மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன எனக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனால் ஐ.நா சபையின் கூட்டத்தை புறக்கணித்த மத்திய அரசு, மனித உரிமைகள் ஆணையம் உள்நோக்கத்துடன் அறிக்கை தயார் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்த, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில்,  ``ரம்ஜான் நேரங்களில் கூட காஷ்மீரில் வன்முறைகள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு மத்திய அரசைக் தான் குற்றம் சொல்ல வேண்டும். கடந்த 4 மாதங்களில் மட்டும் காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இதில் அதிகப்படியானோர் நமது ராணுவ வீரர்கள். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு கேலிக்கூத்தாகியுள்ளது. நாட்டின் ராணுவ அமைச்சர் உட்கட்சி விவகாரங்களில் பிஸியாகி உள்ள நிலையில், பிரதமரோ வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தால் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் அதிகரித்துள்ளது எனக் கூறப்படுவை அனைத்தும் பொய் என ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பல நாடுகளுக்குச் சென்று பல தலைவர்களை பிரதமர் சந்தித்தபோதிலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் பக்கம் நிற்க யாரும் தயாராக இல்லை. இவை அனைத்தும் கடந்த 4 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி சென்ற வெளிநாட்டுப் பயணங்கள் தோல்வியில் முடிந்துள்ளதையே காட்டுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க