ஏழாவது நாளாக தொடரும் போராட்டம்..! ஆம் ஆத்மி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயின் உடல் நலக் குறைபாட்டின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆம் ஆத்மி

டெல்லி மாநில அரசில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பகுதி நேர வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11-ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாள்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் 3 அமைச்சர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் நேற்று மாலை ஆம் ஆத்மி  அமைச்சர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி வீட்டுக்கு பிரமாண்ட பேரணியாக சென்றனர். ஆம் ஆத்மி பேரணி நடைபெறுவதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க், பட்டேல் சவுக், மத்திய தலைமைச் செயலகம், உத்யோக் பவன் மற்றும் ஜன்பத் ஆகிய ரெயில் நிலையங்களின் இரு வாயில்களும் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் உடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக லோக் நாயக் ஜெய் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!