வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (18/06/2018)

கடைசி தொடர்பு:09:42 (18/06/2018)

`காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை’ - ராஜ்நாத்சிங் அதிரடி அறிவிப்பு

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்தக் காலங்களிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால், `காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை' என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத்சிங்  போர் நிறுத்தம்

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,   `ரம்ஜான் நோன்பை அமைதியான முறையில் காஷ்மீர் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. காஷ்மீர் மக்கள்மீது கொண்ட அன்பு மற்றும் அக்கறையின் காரணமாகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்திலும் தீவிரவாதிகள் 60-க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் செயல்களை அரங்கேற்றியுள்ளனர். இதனால், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை உடனடியாக தொடர, பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். 

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஒன்பது பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும்,  அப்பாவி பொதுமக்கள் 6 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவித்தார். முன்னதாக, ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடத் தனது சொந்த கிரமத்துக்குச் சென்ற ஔரங்கசீப் என்ற ராணுவ வீரரை, தீவிரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.