``வீடியோ கான்ஃபரன்ஸிங்ல மோடிகிட்ட பேசப் போறோம்!" - காரைக்கால் விவசாயி முருகபூபதி | I have got a chance to talk about farmers issue to modi

வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (18/06/2018)

கடைசி தொடர்பு:12:27 (18/06/2018)

``வீடியோ கான்ஃபரன்ஸிங்ல மோடிகிட்ட பேசப் போறோம்!" - காரைக்கால் விவசாயி முருகபூபதி

``வீடியோ கான்ஃபரன்ஸிங்ல மோடிகிட்ட பேசப் போறோம்!

``விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி மோடி கண்டுகொள்வதே இல்லை" என்று எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் வரும் 20 ம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் மோடி கலந்துரையாட உள்ளார். வரும் 20 ம் தேதி காலை 9.30 மணியளவில் இந்த உரையாடல் நடைபெற உள்ளது. இதில்  கலந்துகொள்வதற்காக நாடு முழுவதுமிருந்து விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த உரையாடலுக்காக காரைக்கால் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 5 விவசாயிகளில் ஒருவர்தான் முருகபூபதி. இவர் இயற்கை முறையில், பாரம்பர்ய கத்தரி ரகமான சிவந்தம்பட்டி கத்தரி ரகத்தை குறைந்த நீரில் சாகுபடி செய்து அதில் வெற்றி கண்டுள்ளதால் இந்தக் கலந்துரையாடலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பேசினோம்,

 `` `குறைந்த நீரில் கோடைக்கால பயிர்களை சாகுபடி செய்யும் முறை' என்ற தலைப்பில் பிரதமரிடம் பேச நான் தேர்வாகியுள்ளேன். தற்போது நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயம் செய்யும் போது பயிர்களுக்குப் பாத்தி கட்டி அதன் மூலம் நீர் பாய்ச்சும் போது அதில் பாதி நீர் நீராவியாகிவிடுவதால் பயிர்களுக்கு முழுவதுமாக நீர் சென்றடையாது. இதற்கு தகுந்த மாற்று சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் பாத்தியில் நீர் தேங்காமல் அனைத்துச் செடிகளுக்கும் செல்லுமாறு வடிகால் அமைப்பது. இந்தப் பாசன முறையில் நான் சாகுபடி செய்துள்ள பாரம்பர்ய ரக கத்தரிச் செடிகள் கிட்டத்தட்ட 6 அடி உயரம் வளர்ந்து அதிக மகசூலை தருகின்றன.  இந்தப் பாசன முறைக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதில்லை. எனவே, இந்தப் பாசன முறை பற்றி பேச உள்ளேன் " என்றார்.

விவசாயிகளின் குறைகள் பற்றி ஏதேனும் கூறுவீர்களா என்று நாம் கேட்டதற்கு, ``எனக்குக் கொடுத்துள்ள தலைப்பு குறைந்த நீர் கொண்டு பயிர்களைச் சாகுபடி செய்யும் முறை பற்றியதுதான். ஆனால், என் நோக்கம் இதுவல்ல. இந்தப் பாசன முறை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். நான் விவசாயிகளின் முக்கியப் பிரச்னைகளைப் பற்றியே பேச விரும்புகிறேன். விவசாயிகளின் குறைகளைப் பற்றிப் பேச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் கேட்டுள்ளேன். அனுமதியளித்தால் விவசாயிகளின் குறைகள் பற்றி நிச்சயம் பேசுவேன். அதற்காக எனக்கு ஒரு நிமிடம் கொடுத்தால் கூட போதும்" என்றார்.

மேலும், எதுமாதிரியான விவசாயிகளின் குறைகள் பற்றிப் பேசுவீர்கள் என்று கேட்டதற்கு, ``நாடு முழுவதும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பல ஏக்கர்களில் உள்ளன. அவற்றில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு எந்தவொரு சலுகையும், மானியமும் கிடைப்பதில்லை. சொந்தமாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 90 சதவிகிதம் வரை கூட மானியம் கிடைக்கிறது. ஆனால், கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எந்த மானியமும் இல்லை. மாறாக, பல நெருக்கடிகளையே சந்திக்க வேண்டியுள்ளது.  வசதி வாய்ப்பு குறைந்த விவசாயிகளே கோயில் நிலங்களில் சாகுபடி செய்கின்றனர். எனவே, அவர்களுக்குக் குறிப்பிட்ட தகுந்த சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கினால் கண்டிப்பாக விவசாயத்தில் மாற்றம் ஏற்படும். இது நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்று. எனக்கு வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக இந்தப் பிரச்னையை பிரதமரின் முன் வைப்பேன்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்