`விடுதலையானதும் உங்களுக்கு வேலை!' - கைதிகளை குஷிப்படுத்திய பாபா ராம்தேவ் | Baba Ramdev Conducts Yoga Session In Jail

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (18/06/2018)

கடைசி தொடர்பு:13:50 (18/06/2018)

`விடுதலையானதும் உங்களுக்கு வேலை!' - கைதிகளை குஷிப்படுத்திய பாபா ராம்தேவ்

டெல்லி திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு யோகா மற்றும் அதன் நற்பயன்களை செய்துகாட்டி விளக்கினார் பாபா ராம்தேவ்.

பாபா ராம்தேவ்

உலக யோகா தினம் வருகிற 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு உலகின் பல்வேறு இடங்களில் இப்போதிலிருந்தே இதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் பல இடங்களில் யோகா தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். அதன்படி நேற்று காலை டெல்லி திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு யோகா கற்பித்தார் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம் தேவ். அவர் அங்கு 4 மணி நேரம் இருந்தார். சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு நடுவே யோகா செய்துகாட்டி அதன் பயன் பற்றி விளக்கினார்.

மேலும், கைதிகள் ஒழுக்கமாக இருக்க சில அறிவுரைகளையும் வழங்கினார். அதில் பேசிய அவர், “நீங்கள் முதலில் கோபத்தையும் பலிவாங்கும் எண்ணத்தையும் கைவிட வேண்டும். இதுவே நீங்கள் எனக்கு தரும் குரு தட்சணையாக இருக்கும். மேலும், அனைவரும் புகை மற்றும் போதைப் பழக்கத்தையும் முற்றிலும் கைவிட வேண்டும்” எனக் கூறினார்.

சிறைக் கைதிகள் விடுதலைப் பெற்று வெளியில் வரும்போது அவர்களில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பாபா ராம் தேவ் உறுதியளித்ததாகச் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.