ஊழலுக்கு வழிவகுக்கும் வங்கிக் கடன் தள்ளுபடிகள்... பாதிப்புக்குள்ளாகும் மக்கள் நலத்திட்டங்கள்!

ந்தவொரு நாட்டின் பொருளாதாரத்துக்கும் முதுகெலும்பாக இருப்பது வங்கித் துறைதான். இந்திய வங்கி அமைப்பு 27 பொதுத்துறை வங்கிகள், 26 தனியார் வங்கிகள், 46 வெளிநாட்டு வங்கிகள், 56 பிராந்தியக் கிராமப்புற வங்கிகள், 1,574 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 93,913 கிராமப்புறக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. நாட்டின் வங்கி அமைப்பின் சொத்துகளில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானவை பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

பணம்

ஒரு நாட்டில் புழங்கும் அத்தனை பணத்தையும் பராமரிப்பது வங்கிகள்தான் என்பதால், பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் மிகப் பெரிது. நம் நாட்டில் அரசுடைமை ஆக்கப் பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளதால், அவற்றை மக்கள் நூறு சதவிகிதம் நம்புகின்றனர். இதனால்தான் பல லட்சம் கோடி ரூபாயை வங்கிகளில் போட்டு வைத்திருக்கின்றனர். மேலும், பொருளாதாரம் வளரும்போது அதனால் நேரடியான பயனை அடைவது வங்கித் துறைதான். கடந்த இருபது ஆண்டுகளில் நமது இந்திய நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சியின் காரணமாகப் பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. அவற்றின் பங்குகளை வாங்கியவர்கள் மிகப் பெரிய லாபம் கண்டார்கள்.

வாராக் கடனும் அதிகரிக்கும் நஷ்டமும்

ஆனால், வங்கித் துறையானது முன்பிருந்தது போல இப்போது இல்லை. பொதுத்துறை வங்கிகளும், தனியார் துறை வங்கிகளும் பல்வேறு பிரச்னையில் சிக்கி, அவற்றிலிருந்து வெளியேற முடியாமல் திணறுகின்றன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட வங்கிகளின் நான்காவது காலாண்டு முடிவைப் பார்த்தால் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் இழப்பையே சந்தித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் வாராக் கடன். கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2017-18-ம் நிதியாண்டில், வங்கிகள் 1,44,093 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்துள்ளன. முந்தைய நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட 89,048 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் இது 61.8 சதவிகிதம் அதிகமாகும்.

கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து 2018 மார்ச் 31-ம் தேதி வரை கடந்த 10 ஆண்டுகளில் வங்கிகள் செய்த கடன் தள்ளுபடி தொகை 4,80,093 கோடி ரூபாயாக உள்ளது. இதில் 83.4 சதவிகித தொகை, அதாவது 4,00,584 கோடி ரூபாய் பொதுத் துறை வங்கிகளுக்கு உரியது. முடிவடைந்த 2017-18-ம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை 1,20,165 கோடி ரூபாயாகும்.

 

வங்கி

இதில் எஸ்பிஐ வங்கி மட்டும் 2017-18-ம் நிதியாண்டில் 40,281 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்துள்ள நிலையில், நீரவ் மோடியின் மோசடியால் சர்ச்சைக்குள்ளான பஞ்சாப் நேஷனல் வங்கி 7,407 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 10,307 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் எஸ்பிஐ வங்கி செய்த வாராக் கடன் தள்ளுபடி1,23,137 கோடி ரூபாயாகும். அதேபோன்று பேங்க் ஆப் இந்தியா 28,068 கோடி ரூபாய், கனரா வங்கி 25,505 கோடி ரூபாய் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி 25,811 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்துள்ளன.

அதேபோன்று தனியார் வங்கிகள், கடந்த நிதியாண்டுக்கு முந்தைய நிதியாண்டில் 13,119 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்த நிலையில்,கடந்த நிதியாண்டில் 23,928 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்துள்ளன. இதில் ஆக்ஸிஸ் வங்கி கடந்த நிதியாண்டில் 11,688 கோடி ரூபாயையும், ஐசிஐசிஐ வங்கி 9,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தனியார் வங்கிகள் வாராக் கடனாக தள்ளுபடி செய்த தொகை 79,490 கோடி ரூபாய் என ஐசிஆர்ஏ கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

ஊழலுக்கு வழிவகுக்கும் கடன் தள்ளுபடி

"பொதுவாக வங்கிகள் தாங்கள் கொடுத்த கடன்களில், திரும்ப வர வாய்ப்பில்லை என்ற சந்தேகத்துக்குரியதாக இருக்கும் கடன்களைத்தான் தள்ளுபடி பட்டியலில் சேர்க்கின்றன. டெக்னிக்கலாக இது சரியான நடவடிக்கையாகவும், வரவு செலவு கணக்கு புத்தகத்தில் செய்யப்படும் சரி செய்யும் நடவடிக்கையாகவும் உள்ளது. பொதுவாக வாராக்கடன் தள்ளுபடி செய்யப்படும்போது அது வங்கியின் வரவு செலவு கணக்கு புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டு விடும். மேலும் வங்கிகளுக்கு வரிப் பயன்களும் கிடைக்கும். அதே சமயம் கொடுத்த கடன், வங்கியின் கணக்கு புத்தகத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் கூட அதனை வசூல் செய்வதற்கான நடவடிக்கைகளை வங்கிகள் தொடரலாம். ஆனால், கணக்கு புத்தகத்திலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட கடனைத் திரும்ப வசூலிக்கும் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மையும் குறைவாக இருப்பதால், அந்தத் தொகை மீட்கப்படுவது மிகுந்த சிரமமான ஒன்றாகவே உள்ளது. ஒருவேளை வாராக்கடனாகத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன், வசூலிக்கப்பட்டால் அந்தத் தொகை வங்கியின் லாப கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்" என்கிறார்கள் வங்கி உயரதிகாரிகள்.

மல்லையா - நீரவ் மோடி - கடன்

கடந்த நிதியாண்டில் மட்டும் வங்கிகளின் வாராக்கடன் ரூ. 10.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது ரூ. 8 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிலையில், கடந்த நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு வாராக்கடன் அதிகரிப்பால் ரூ. 87,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாராக் கடனைத் தள்ளுபடி செய்யும் நடைமுறை குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. "டெக்னிக்கல் கடன் தள்ளுபடி என்ற ஒன்று கிடையவே கிடையாது. இப்படிச் செய்வது வெளிப்படைத்தன்மையற்ற கொள்கை எதுவும் இல்லாத செயலாக இருக்கிறது. பொதுவாகக் கடன் தள்ளுபடி என்பது சிறிய தொகையாக இருக்கும்போதும், சில நெருக்கடியான தருணங்களின்போதும் எப்போதாவது பயன்படுத்தப்பட வேண்டும். இந்த 'டெக்னிக்கல் கடன் தள்ளுபடி' என்பது வெளிப்படைத்தன்மை இல்லாத நிலையை உருவாக்குவதோடு, கடன் ரிஸ்க் நிர்வாக முறையையும் அழித்து, அனைத்து வகையான முறைகேடுகளையும் செய்வதற்கு வழிவகுக்கிறது. பொதுமக்கள் பணத்தைத்தான் நீங்கள் தள்ளுபடி செய்கிறீர்கள். இது ஒரு வகையான ஊழல்" என்று வெடிக்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் கே.சி. சக்கரபர்த்தி.

பாதிக்கப்படும் மக்கள் நலத்திட்டங்கள்

இப்படி வாராக் கடன் தள்ளுபடி ஒருபுறம் ஊழலுக்கு வழிவகுக்கிறது என்றால், மறுபுறம் பொதுமக்களுக்கு வேறு பல பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாகக் கடந்த ஆண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,300 கோடி ரூபாய் மோசடி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் 2017, டிசம்பர் 21-ம் தேதி வரை 25,600 வங்கி மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன.

நியாயமாக பொதுமக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப் பணம் மக்கள் நலத்திட்டங்களுக்காகத்தான் செலவிடப்பட வேண்டும். ஆனால், இதுபோன்ற மோசடிகள் மற்றும் வாராக் கடன் தள்ளுபடியால் பாதிக்கப்படும் வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக மத்திய அரசே, அவற்றுக்கு மறுமூலதனத்தை வழங்குகிறது. அப்படிக் கடந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2.11 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசால் பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதனம் செய்யப்பட்டது. இந்த மறுமூலதனப் பணம் எல்லாமே பொதுமக்களின் வரிப் பணம். இந்தப் பணம்தான் பல்வேறு மக்கள் நல மற்றும் சமூக நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கையில், அவற்றுக்கு உரிய பணத்தைத் தூக்கி வங்கிகளுக்கு மறுமூலதனமாக கொடுக்கும்போது பாதிக்கப்படுவது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள்தான்.

வாராக் கடன்

அடுத்ததாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வங்கிகள் இழப்பதால், அது வங்கிகளின் பங்குகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஆட்டம் காண வைத்ததால், 2018, பிப்ரவரி 14-ம் தேதியன்று அந்த வங்கியின் பங்குகள் விலை 60% சரிவடைந்தன.

மேலும் இதுபோன்ற மோசடிகள், ஊழல்கள் மற்றும் வாராக் கடன் தள்ளுபடியால் வங்கிகளின் மூலதனம் பாதிக்கப்படுவதால் புதிதாகக் கடன் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வங்கிகளிடம் கடன் வாங்கி அவற்றை நியாயமாக திருப்பிச் செலுத்தும் தொழில் முனைவோர்கள் மற்றும் தனிநபர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

சாமான்ய மக்கள் ஓரிரு லட்சம் ரூபாய் கடன் கேட்டு அணுகும்போது வங்கிகள் காட்டும் கெடுபிடிகள், ஏனோ நீரவ்மோடிகள், மல்லையாக்களிடம் காட்டப்படுவதில்லை. இனியாவது இதுபோன்ற மோசடி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாரிக் கொடுத்துவிட்டு, பின்னர் அவற்றை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கும் நிலைமை ஏற்படாதவாறு வங்கிகள், தங்களது கடன் வழங்கும் முறையை வெளிப்படையாகவும், முதலீட்டுக்குப் பாதிப்புக்கு இல்லாதவாறும் பார்த்துக்கொள்வது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!