வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (18/06/2018)

கடைசி தொடர்பு:17:15 (18/06/2018)

உலகின் மிக உயரமான குப்பை மேடாக மாறிவரும் எவரெஸ்ட் சிகரம்!

இந்தியாவில் உள்ள எவரெஸ்ட் சிகரம் மனிதர்களின் பயன்பாட்டால் குப்பை மேடாக மாறிவருவதாகச் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எவரெஸ்ட்

உலகின் மிக உயரமான சிகரம் என்று பெயர் பெற்றுள்ள எவரெஸ்ட், நேபாளத்துக்கு அருகில் உள்ளது. இது 29,029 அடி உயரம் கொண்டது. எவரெஸ்ட்  உலகின் உயரமான சிகரம் என்பதால் ஆண்டு தோறும் உலகில் உள்ள பல்வேறு  மலை ஏறும் வீரர்கள் இங்கு வந்து சாதனை படைத்துச் செல்கின்றனர். அவ்வாறு வரும் வீரர்கள் தங்களுடன் கொண்டுவரும் பொருள்களை அங்கேயே  விட்டுச் செல்வதால் சிகரமே பெரும் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. 

இந்த  வருடம் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் சிகரத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் கூடாரங்கள், மீதமான உணவுப் பொருள்கள், காலி கேஸ் சிலிண்டர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மனித கழிவுகள் போன்றவற்றால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், எவரெஸ்ட் சிகரம் குப்பைகளால் சூழ்ந்துள்ளதால் இது உயரமான குப்பை மேடாகக் காட்சியளிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மலை ஏறும் வீரர்கள் கீழே இறங்கும்போது 8 கிலோ கழிவுகளை உடன் கொண்டுவந்தால் அவர்களுக்கு மலை ஏற்ற பணம் திருப்பி அளிக்கப்படும் என முன்னதாக நேபாள அரசு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது மலை ஏறும் வீரர்களுடன் நேபாளத்தில் இருக்கும் வழிகாட்டிகளும் செல்வதால் பெரும்பாலும் வழிகாட்டிகளே குப்பைகளைச் சுமந்து வருகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறும்போது, ‘நாங்கள் பலமுறை பல வீரர்களுக்கு மலை ஏற உதவி செய்துள்ளோம். ஆனால், அவர்கள் கொண்டுவரும் பொருள்கள் மற்றும் மனித கழிவுகளைச் சிகரத்தில் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.