'நிலத்தைக் கொடுங்க' என்று கேட்ட பெண்ணுக்கு ஊராட்சி தலைவரால் நேர்ந்த கொடூரம்!

தெலங்கானாவின் தரப்பள்ளி பகுதியில் ஊராட்சித் தலைவர் ஒருவர் பெண்ணின் மார்பில் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எட்டி உதைத்த ஊராட்சி தலைவர்!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ளது தரப்பள்ளி மண்டல் ஊராட்சி. இங்கு ஊராட்சித் தலைவராக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த கோபி என்பவர் உள்ளார். 10 மாதங்களுக்கு முன்பு இவர் தனக்குச் சொந்தமான நிலத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ரூ.33 லட்சத்துக்கு விற்றுள்ளார். ஆனால், 10 மாதங்கள் ஆகியும் அந்தப் பெண்ணுக்கு நிலத்தைத் தராமல் இழுத்தடித்துள்ளார். நிலத்தை ஒப்படைக்கும்படி கேட்டதற்கு ``நிலத்தின் மதிப்பு கூடிவிட்டது. தற்போதைய மதிப்புப்படி ரூ.50 லட்சம் கொடுத்தால் மட்டுமே நிலத்தைக் கொடுப்பேன்" என அவர் கூறியுள்ளார். 

இதனையடுத்து அந்தப் பெண், தனது உறவினர்களுடன் நேற்று கோபி வீட்டுக்குச் சென்று போராட்டம் நடத்தினார். அப்போது ஏற்பட்ட  வாக்குவாதத்தில் ஆவேசப்பட்ட அந்தப் பெண் கோபியின் மீது செருப்பைக் கொண்டு அடிக்கவே, ஆத்திரமடைந்த கோபி அந்தப் பெண்ணை மார்பில் எட்டி உதைத்தார். பின்னர் அங்கு வந்த போலீஸ் அவர்களை சமாதானப்படுத்தியது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரை அடுத்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அங்குள்ளவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்தக் காட்சிகள் வைரலாகப் பரவியதோடு ஊராட்சித் தலைவருக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!