`அடுத்தவர் வீட்டில் போராட்டம் நடத்தலாமா?' - கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் வீட்டில் கடந்த ஆறு நாள்களுக்கும் மேலாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். `இந்தத் தர்ணா போராட்டத்துக்கு யார் அனுமதி அளித்தார்கள்?' என டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

கெஜ்ரிவால்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் யூனியன் பிரதேசமாக டெல்லி இருப்பதால், `மாநில அரசு மேற்கொள்ளும் மக்கள் நலத்திட்டங்களை உயர் அதிகாரிகள் செயல்படுத்தாமல் புறக்கணிக்கின்றனர்' என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில், ரேஷன் பொருள்களை வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை அண்மையில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை, செயல்படுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மறுத்ததுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை ஆளுநர் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் வீட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

`துணைநிலை ஆளுநர் வீட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தி வரும் தர்ணா போராட்டத்தைக் கைவிட வேண்டும்' எனப் பா.ஜ.க எம்.எல்.ஏ விஜேந்தர் குப்தா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று வந்தபோது, `இது போராட்டம் அல்ல. மற்றொருவரின் வீட்டுக்குள் அல்லது அலுவலகத்துக்குள் சென்று போராட்டம் நடத்தக் கூடாது. இந்தப் போராட்டத்துக்கு யார் அனுமதி அளித்து?' எனக் கேள்வி எழுப்பியுள்ளனர் நீதிபதிகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!