சி.டி.இ.டி தேர்வில் தமிழ் மறுப்பா..? -என்ன சொல்கிறார் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. `இந்தத் தகவல் உண்மையில்லை' என்று மறுத்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். 

பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகள் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சிபெற வேண்டும். இதைத் தவிர, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் சைனிக் உள்ளிட்ட பள்ளிகளும் ஆசிரியராகப் பணியாற்ற இந்தத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இத்தேர்வினை, மத்திய இடைநிலை கல்விவாரியம் சி.பி.எஸ்.இ எடுத்து நடத்தி வருகிறது. தாள் 1, தாள் 2 என இரண்டு தாள்களை கொண்ட சி.டி.இ.டி தேர்வில் மொழித் தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு வரை தமிழ் மொழி உட்பட 20 மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டும் தேர்வு எழுத முடியும் என்று செய்திகள் வெளியாகின. இதனையடுத்து, இந்த ஆண்டு தேர்வு எழுதவிருந்த தேர்வர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இத்தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு இந்தமுறை அமலுக்கு வந்தால் மிகவும் பின்னடைவாக இருக்கும் எனக் கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். 

இந்நிலையில், சி.டி.இ.டி தேர்வு குறித்து வெளியான செய்திக்கு விளக்கமளித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், `இந்தி சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் தேர்வு எழுத முடியும் என்று வெளியான தகவல் உண்மையில்லை. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்பட 20 மொழிகளில், தேர்வர்கள் தேர்வு எழுதலாம். 20 மொழிகளில் தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ-க்கு உத்தரவிட்டுள்ளேன்' என தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!