வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (18/06/2018)

கடைசி தொடர்பு:19:28 (18/06/2018)

`ரயில்கள் தாமதமானால் உணவு வழங்கப்படும்!’ - அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடி

ரயில்களை நேரம் தவறாமல் இயக்கத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

பியூஷ் கோயல் ரயில்கள்

உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கைக் கொண்ட இந்தியன் ரயில்வேயில், `சரியான நேரத்துக்கு ரயில்கள் இயக்கப்படுவதில்லை' என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, பல்வேறு நடவடிக்கையை ரயில்வே அமைச்சகம் எடுத்து வருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ஏழு ரயில்வே மண்டலங்களில் ஆய்வு நடத்தினோம். அதில், ரயில்களின் நேரம் தவறாமை, தூய்மை மற்றும் உணவு சேவைகள் ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரயில்கள் சரியான நேரத்துக்கு எடுக்கவும் ரயில்நிலையங்களுக்குச் சென்றடையவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரயில்களின் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. ரயில்வே நெட்வொர்க் முழுவதும் தூய்மைப்படுத்துவதில் ரயில்வே துறையினர் தீவிரமான பங்கேற்பாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதுகுறித்து பயணிகள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவு நேரத்தில் தாமதமாக ரயில்கள் புறப்படும் பட்சத்தில் பயணிகளுக்கு உணவு, தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.