`ராகுலை பிரதமராகப் பார்க்க ஆசை' - கலகலத்த அத்வானியின் முன்னாள் உதவியாளர்!

ராகுல் காந்தியைப் பிரதமராகப் பார்க்க ஆசைப்படுகிறேன் என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி தெரிவித்துள்ளார். 

சுதீந்திர குல்கர்னி

பா.ஜ.க-வின் மூத்தத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானியின் உதவியாளராக இருந்தவர் சுதீந்திர குல்கர்னி. பா.ஜ.க-வின் தீவிர விசுவாசியாக இருந்த இவர் தற்போது மோடியின் மீதான அதிருப்தியின் காரணமாக பா.ஜ.க.வுக்கு எதிராகக் கருத்துகள் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, இவர் தெரிவித்த கருத்துகள் பா.ஜ.க.வுக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய குல்கர்னி,  ``பாகிஸ்தான், சீனா உடனான பெரிய பிரச்னைகளைச் சமாளிக்க மோடி அரசு தவறிவிட்டது. 

இந்த நாடுகளுக்கு எதிரான பிரச்னைகளை சரி செய்ய என்ன தேவை என்பதை நாம் அறிய வேண்டும். காஷ்மீர் மாதிரியான பெரிய பிரச்னைகளை தீர்ப்பதற்கு இந்தியாவுக்கு ஒரு தலைவர் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் ராகுல் காந்தியைப் பிரதமராகப் பார்க்க ஆசைப்படுகிறேன். ராகுல் நல்ல உள்ளம் கொண்ட ஒரு தலைவர். அதனால்தான் அவரை நான் பரிந்துரைக்கிறேன். ராகுல் ஓர் இளைஞர் மட்டுமல்ல. அவர் ஒரு சித்தாந்தவாதியும்கூட. இப்போதைய காலகட்டங்களில் ராகுலைப்போல எந்த அரசியல் தலைவரும் அன்பு, பாசம் மற்றும் இரக்கம் பற்றிப் பேசியதில்லை. பிரதமர் மோடி தீர்க்கத் தவறிய விவகாரங்களை எப்படித் தீர்க்க வேண்டும் என்ற புதிய யோசனைகளைக் கற்று அவர் ஒரு சிறந்த தலைவராக மாற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!