ராகுல்காந்தி - ராஜிவ்காந்தியின் 2.0 வாக இருப்பாரா? #HBDRahulGandhi

புதிய எழுச்சியை நோக்கிய காங்கிரஸின் 2வது வெர்ஷனாக இருக்கும் ராகுல்காந்தி மோடிக்கு வரும் தேர்தலில் சோதனை அளிப்பாரா என்ற கேள்வி ராகுலை பலப்படுத்துகிறது.

ராகுல்காந்தி - ராஜிவ்காந்தியின் 2.0 வாக இருப்பாரா? #HBDRahulGandhi

40 வயதில் பிரதமரானார் ராஜிவ்காந்தி. இந்தியாவின் மிக இளமையான பிரதமர் இன்றுவரை அவர்தான். ராகுலுக்கு இப்போது வயது 48. இப்போதுதான் 132 ஆண்டு பழைமையான இந்திய தேசிய காங்கிரஸுக்குத் தலைவராகியுள்ளார். சிறு வயதில் பாட்டியை உடனிருந்தவர்கள் கொன்று விட்டார்கள். என் நண்பர்கள் என் பாட்டியைக் கொன்றார்கள் என்று கூறியவர். அதன்பின் தந்தையின் மரணத்தையும் தாங்கிக் கொண்டார். மன்மோகன்சிங் முதல்முறை ஆட்சிக்கு வரும்போதே காங்கிரஸ் தலைவராகியிருக்க வேண்டியவர் ராகுல். ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் அவரது வரவை தள்ளிப்போட்டது. தற்போது கர்நாடகத் தேர்தலில் ``நான்தான் பிரதமர் வேட்பாளர்'' என முழங்கினார். காங்கிரஸ் வெல்லாவிட்டாலும் பாஜக-வை ஆட்டிப்பார்த்தது இந்த வார்த்தை. தந்தைக்குப் பின் அதே இடத்துக்கு வருவாரா? புதிய எழுச்சியை நோக்கிய காங்கிரஸின் 2வது வெர்ஷனாக இருக்கும் ராகுல்காந்தி, மோடிக்கு வரவிருக்கும் தேர்தலில் சோதனை அளிப்பாரா என்ற கேள்விகள் ராகுலை பலப்படுத்துகின்றன. 48 வயதில் தேர்தலைச் சந்திக்கிறார். இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல.

ராகுல்காந்தி

48வது பிறந்தநாளுக்குப் பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில் பிரதமர் மோடியின் வாழ்த்து முக்கியமானது. ``ராகுல்காந்தி ஆரோக்கியத்தோடு நீண்ட நாள்கள் வாழவேண்டும்'' என்று ட்வீட் செய்துள்ளார். இதுவரை ராகுலை எம்.பியாக மட்டுமே பார்த்துள்ளனர். அவரது ஆளுமையை நிரூபிக்க பெரிய சவால்களை ராகுல் எதிர்கொள்ள வேண்டும். ராகுலை தலைவராக இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மோடிக்கு எதிரான சக்திவாய்ந்த நபராக ராகுல் இன்னமும் பிராண்ட் ஆகாமலே இருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுகின்றன. இதற்கெல்லாம் ராகுல் இப்போதிலிருந்தே பதில் சொல்ல வேண்டும். 2012 டிசம்பரில் மோடியை டெல்லிக்கு வாருங்கள் என்று அழைத்தது பாஜக. 18 மாதங்கள் மோடியை பிராண்டிங் செய்தனர். 2014 மே மாதம் மோடி பிரதமரானார். 2017 டிசம்பரில் காங்கிரஸ் ராகுலைத் தலைவராக்கியது. ராகுலை பிராண்டிங் செய்ய ஆரம்பித்துள்ளது. ராகுல் காங்கிரஸை வழிநடத்துவார். மோடி எதிர்ப்பு ராகுலுக்குச் சாதகமாகும் என்றெல்லாம் பாசிட்டிவ் நோட்கள் வரத்தொடங்கியுள்ளன. இவற்றையெல்லாம் ராகுலின் செயல்கள் நிரூபிக்க வேண்டும். அதற்கு ராகுலின் 2.0 சிறப்பாக அமையவேண்டும்.

ராகுல் 2.0:

ஸ்பெயின் அழகியுடன் காதல், ஆப்கான் இளவரசியுடன் கிசுகிசு என அனைத்துச் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர் ராகுல். இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு தன் பள்ளிப் படிப்பை வீட்டிலிருந்தே முடித்தார் ராகுல். புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் மற்றும் ரோலின்ஸ் பல்கலைக்கழகங்களில் தன் பட்டப்படிப்பை முடித்தவர் ஜப்பானின் புகழ்பெற்ற அக்கிடோ(Aikido ) தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்.

அரசியல், படிப்பு, பாதுகாப்பு எனத் தன்னைப் பல விதத்தில் மாற்றிக்கொண்ட ராகுல்காந்தி கடந்து வந்த பாதை:

2004

நேர்காணல் ஒன்றில் தன்னுடைய காதலி என்று கிசுகிசுக்கப்பட்ட பெண்ணைப் பற்றி மனம் திறந்த ராகுல் " அவர் பெயர் வேரோனிக்கா கார்டெலி. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அவர் கட்டடக் கலை வல்லுநர். வேரோனிக்கா எனக்கு நல்ல தோழி" என்று கூறினார்.

மார்ச்,2008

ஒடிசாவின் நியம்கிரி மலைப்பகுதியில் மலைவாழ் மக்களுக்காக ஒருவர் குரல் கொடுக்கிறார் என்றால் அவர் பெயர் ராகுல் காந்தியாகத்தான் இருக்கும் என்ற அப்பகுதி மக்களிடம் இரண்டே வருடங்களில் அங்கு அமையவிருந்த சுரங்கத் திட்டத்தை ரத்துசெய்து சொன்ன சொல்லைக் காப்பாற்றியவர் ராகுல் காந்தி.

ஜனவரி, 2009

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பட்டியல் இனத்தவர் வீடுகளில் ஜனவரி முதல் செப்டம்பர் வரை டிஸ்கவரி ஆஃப் இந்தியா திட்டத்துக்காக தங்கி சாமனியர்களின் தலைவனாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

மே 2011

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் நில கையகப்படுத்துதலுக்கு எதிராகப் போராடி , 2011ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அதைச் சட்டமாக்கினார்.

ஜனவரி 2013

``என் தாய் என் அறைக்கு வந்து அழுதிருக்கிறார். ஏனெனில் அவருக்குத் தெரியும் அரசியல் அதிகாரம் எவ்வளவு பெரிய கொடிய விஷம் என்று'' என்று ராகுல் பேசிய ஜெய்ப்பூர் உரை  அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பிப்ரவரி 2014

வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த நிடோ தனிம் எனும் மாணவனுக்கு ஏற்பட்ட நிறவெறித் தாக்குதலுக்காக மாணவர்களுடன் போராட்டக் களத்தில் குதித்தார்.

ராகுல்காந்தி

ஏப்ரல் 2015

20 நிமிட உரையில் பிரதமர் மோடியை விமர்சித்தது இன்றளவும் மறக்க முடியாதது. உங்கள் அரசு பணக்காரர்களுக்கானது. மோடி சர்க்கார் ஒரு சூட்-பூட் சர்க்கார் என விமர்சித்தார்.

மே 2015

மோடி அரசு கேரளாவில் மீன்பிடித்தல் மீது விதிக்கப்பட்ட தடையைச் சாடும் வகையில் கேரளா சென்ற ராகுல் மீன் உணவை உண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

ஜூன் 2015

துப்புரவுத் தொழிலாளர்களுடன் இணைந்து பட்பர்கன்ச் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜனவரி 2016

ரோஹித் வெமுலா தற்கொலைக்குக் காரணமான அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

நவம்பர் 2016

பணமதிப்பிழப்பு காரணமாக 4000 ரூபாயை மாற்ற பாராளுமன்றம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் வரிசையில் காத்திருந்தார்.

செப்டம்பர் 2017

இந்தியப் பொருளாதாரம் வீழ்கிறது என்று பிரின்ஸ்டன் மற்றும் யூசிஎல்ஏ பல்கலைக்கழகங்களில் ராகுல் ஆற்றிய உரை அனைவரையும் கவனிக்க வைத்தது.

அக்டோபர் 2017:

ஜி.எஸ்.டி வரியைக் கொள்ளைக்காரர்களின் வரி இது ஒரு கப்பர் சிங் டேக்ஸ் என விமர்சித்தார்.

மே 2018:

கர்நாடக தேர்தலின் போது ``ஆம்'' நான்தான் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் என முழங்கினார். கர்நாடகத் தேர்தலில் கட்சிகள் பெரும்பான்மை பெறாத போதும், குமாரசாமியுடன் இணைந்து காங்கிரஸில் பாஜகவை வீழ்த்தினார். 

 

ராகுல்காந்தி

மும்பை, இந்தியர்கள் அனைவருக்குமானது என்பதை நிலைநிறுத்த அந்தேரியிலிருந்து தாதருக்குப் புறநகர் ரயிலில் பயணம் செய்தது, கோரக்பூரிலிருந்து மும்பைக்குப் பயணிகளோடு இரண்டாம் க்ளாஸில் பயணித்தது. டெல்லி மொஎட்ரோவில் பயணிப்பது எனப் பாதுகாப்பு வளையங்களை மீறி மிஸ்டர் சிம்பிளாக வலம் வருவதைப் பெரிதும் விரும்புகிறார். ராகுல் அரசியல் சிறுபிள்ளை என்று விமர்சிக்கப்பட்டவர். ஆனால், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர். அப்பா ராஜீவ் காந்தியிடமிருந்து இவருக்கு ஒட்டிக்கொண்ட ஒரு பழக்கம், அவர் போலவே பாதுகாப்பு வளையங்களை மீறி மக்களைச் சந்திப்பது. கட்சியின் மூத்த தலைவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் பலமுறை சொல்லியும் இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாதவர். மக்களோடு நெருங்கிப் பழகும் குணம் ராகுல் காந்திக்கு எப்போதுமே உண்டு. எல்லா விஷயத்திலும் அப்பாவைப் பின் தொடரும் ராகுல். ராஜிவ் வழியில் ஆட்சியைப் பிடிப்பாரா.. மோடி அலைக்கு டஃப் கொடுப்பாரா என்பதுதான் எல்லார் மனதிலும் உள்ள கேள்வி. இதற்கு 2019 தேர்தலில் மக்கள் முடிவு சொல்வார்கள். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!