"என் கோபத்துக்குக்கூட அவர்கள் தகுதியற்றவர்கள்!” கெளரி லங்கேஷின் தங்கை கவிதா #BanMuthalikSene

2017ம் ஆண்டு, செப்டம்பர்  5ம் தேதி, பெங்களூரில் தன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு திரும்பியபோது, சுட்டுக்கொல்லப்பட்டார் கெளரி லங்கேஷ்.

லகம் முழுவதும் இருக்கின்ற பத்திரிகையாளர்களுக்கு 2017ம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டு எனக் கூறலாம். கடந்த ஆண்டு மட்டும் , தங்களின் வேலைக்   காரணமாக , உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை ...46! அதில் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் மூன்று பேர் ..கர்நாடகாவைச் சேர்ந்த  கெளரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளர் உட்பட! 

கெளரி லங்கேஷ்

கவிதா லங்கேஷ் - PC: youtube.com

2017ம் ஆண்டு,  செப்டம்பர்  5ம் தேதி, பெங்களூரில், காந்தி நகரிலுள்ள தன் அலுவலகத்திலிருந்து , ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள தன்  வீட்டிற்கு திரும்பியபோது, மூன்று  மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் கெளரி லங்கேஷ். இந்த கொலை வழக்கில், பல கட்ட விசாரணக்குபிறகு, ஸ்ரீராம் சேனா என்ற இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த பரசுராம் வாக்மோர் என்பவர்தான் கெளரியை சுட்டவர் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. 

கெளரி லங்கேஷ்

PC: Hari Prasad Nadig

இதற்கிடையில், சமீபத்தில், ஒரு பொதுநிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், “காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன. மகாரஷ்ட்ராவில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால் , காங்கிரஸ் ஆட்சியின் தோல்வி பற்றி யாரும்  கேள்விகேட்கவில்லை. இப்போது கெளரி லங்கேஷின் கொலை குறித்து மட்டும் ஏன் பிரதமர் மோடி எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறார் என்று கேள்வி கேட்கிறார்கள். 'கர்நாடகாவில் எந்த நாய் இறந்தாலும், அதற்கு மோடிதான்  பொறுப்பா?', என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார் . இதற்கு, சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகின்றன. மேலும், முத்தாலிக்கின் அமைப்பைத் தடை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர் சமூக ஆர்வலர்கள்!

கவிதா

பரசுராமுடன் பிரமோத் முத்தாலிக்

கெளரி லங்கேஷை கொலை செய்தவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டத்தைப்  பற்றியும், முத்தாலிக்கின் சர்ச்சைக்குரிய பேச்சையைப்  பற்றியும், கெளரி லங்கேஷின் தங்கை கவிதா லங்கேஷ்  ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில், “இந்த நேரத்தில் எனக்கு மிகுந்த வெறுப்பு ஏற்படுகிறது; அதே சமயம் அவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஸ்ரீராம் சேனா போன்ற இந்துத்துவ அமைப்புகள்  இளைஞர்கள் மத்தியில் தவறான கொள்கைகளைப் பரப்பி, அவர்கள் மனத்தில் விஷத்தை விதைக்கின்றனர். இந்துமதம், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறது. இவர்களுக்கு இந்து மதம் பற்றியும் தெரியவில்லை; மனிதநேயம் பற்றியும் தெரியவில்லை!

பிரமோத் முத்தாலிக், விஷத்தன்மை கொண்ட மனிதர்;  அவரின் இந்தக் கருத்து, அவரின் கலாச்சாரத்தை காட்டுகிறது. எனக்குக் கோபம் இருக்கிறது. நானும் அவரைத் திட்டலாம்; ஆனால், என் நேரத்தையை வீணடிக்கவோ என் கோபத்தை வெளிக்காட்டவோக்கூட அவர்கள் தகுதியற்றவர்கள். இப்படியான கருத்துக்களைக் கூறுபவர்களைச் சிறையில் அடைக்கவேண்டும். இதுபோன்ற கருத்துக்களுக்கு இனியும் இங்கு இடமில்லை; கருத்து சுதந்திரம் என்பது பொறுப்புணர்வுடன் வரவேண்டும். அவர்கள் இளம் தலைமுறைகளை, "நீ போ! அவர்களைக் கொல்லு!", என்ற ரீதியில் வழிநடத்துகின்றனர். அவர்கள் இதை ஏதோ தேசபக்திக்கு இணையாகக் கருத தொடங்கிவிடுகின்றனர். அவர்கள் தங்களை ஏதோ நாட்டைக் காப்பாற்றும் ராணுவ வீரர்களைப் போன்று கருதிக்கொள்கின்றனர். பரசுராம் பெற்றோருக்கு இதைப்பற்றியெல்லாம் தெரிந்திருக்கவே வாய்ப்பு இருக்காது என்று அடித்துக்கூறுவேன்", என்று காட்டமாகத் தெரிவித்தார். 

கெளரி லங்கேஷ்

மேலும், இன்னும் தன் சகோதரியின் இழப்பிலிருந்து மீளமுடியாமல் தவிப்பதாகவும் கவிதா தெரிவித்தார். "சிலர் என்னிடம் வந்து, இன்றும் துக்கம் விசாரிப்பார்கள். நான் இன்றும் கெளரியின் நினைவில்தான் இருக்கிறேன். நான் இந்த அழுகையை நிறுத்தும் நாள் ஒருநாள் வரும் என்று நினைக்கிறேன்", என்று அவர் உருக்கமாகக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!