வீட்டுக்கடன் மானியம் பெற கடன் வரம்பை உயர்த்தியது ரிசர்வ் வங்கி!

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மானியத்தில் வீட்டுக் கடன் பெறுவதற்கான வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கொள்கை அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

ரிசர்வ் வங்கி

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் (பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா) கீழ் வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் மாநகரங்களில் வசிப்பவர்கள் 30 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறலாம் என்ற வரைமுறை இருந்தது. இந்த வரம்பை 35 லட்சம் வரை உயர்த்தியும், இதர நகரங்களில் 20 லட்சம் என்று இருந்ததை கடன் வரம்பை 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இனி மாநகரங்களில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள், வீட்டுக்கடனாக 35 லட்சம் வரையும், இதர நகரங்களில் வசிப்பவர்கள் 25 லட்சம் வரை கடன் பெறலாம். இவ்வாறு கடன் பெறுபவர்களின் வீட்டுமதிப்பின் வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரங்களில் வசிப்பவர்களின் வீட்டு மதிப்பு ரூபாய் 45 லட்சத்துக்கு மிகாமலும், இதர நகரங்களில் வசிப்பவர்களின் வீட்டுமதிப்பு 30 லட்சம் ரூபாய் வரை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன்பெறும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வருமான வரம்பாக 2 லட்சம் என்று இருந்ததை மூன்று லட்சமாகவும், குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு மூன்று லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடன் பெறும் வரம்பு உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம், புதியதாக வீடு வாங்குபவர்கள், வீடு கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள் என்கிறது மத்திய அரசு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!