`தோல்விதான் சிறந்த குரு!' - மிஸ் இந்தியாவான திருச்சி அழகி அனுக்ரீத்தி வாஸ்

`தோல்விதான் சிறந்த குரு!' - மிஸ் இந்தியாவான திருச்சி அழகி அனுக்ரீத்தி வாஸ்

இந்தியப் பெண்கள் பலருக்கும் `அழகி' பட்டத்தின்மீது தீரா ஆசை இருப்பது இயல்பு. ஒவ்வொரு பருவ வயது பெண் இருக்கும் வீட்டிலும், முகக் கண்ணாடிக்கு வேலை அதிகம். முகத்தில் சிறிய பரு எட்டிப்பார்த்தாலே, ஏதோ தீரா நோயில் வீழ்ந்திருப்பதைப்போல் உணர்வார்கள் பெரும்பான்மையான பெண்கள். இப்படி சின்ன சின்ன கவலைகளையும் பெரிய கனவுகளையும் விடா முயற்சிகளையும் தன்னுடனே வைத்திருந்த திருச்சியைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் இன்று `மிஸ் இந்தியா' பட்டம் வென்றுள்ளார்.

அனுக்ரீத்தி வாஸ்


எளிமையான குடும்பத்தில் பிறந்த, 19 வயதான அனுக்ரீத்தி வாஸ், சென்னை லயோலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிரெஞ்ச் இலக்கியம் படித்துவருகிறார். ``சின்ன கிராமத்தில் வசிப்பவர்களுக்கென ஏகப்பட்ட வரைமுறைகள் இருக்கின்றன. அத்தனையும் உடைக்கறதுக்காகவே இந்த அழகிப் போட்டியில் நான் கலந்துக்கிட்டேன்" என்று தமிழ்நாட்டில் நடைபெற்ற `மிஸ் இந்தியா தமிழ்நாடு 2018' போட்டியின்போது கூறினார். இன்று 2018 ஆண்டின் உலக அழகிப் போட்டிக்கு இந்தியப் பேரழகியாகத் தேர்வாகியுள்ளார்.

Anukreethy Vas


29 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் என நாடெங்கிலுமிருந்து 30 தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிகள் மும்பையில் `பெமினா மிஸ் இந்தியா 2018' போட்டியில் கலந்துகொண்டனர். திறமைக்கான போட்டிகள், ராம்ப் வாக், காஸ்ட்யூம் கன்டெஸ்ட் எனப் பல போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று நல்ல மதிப்பெண்ணைப் பெற்றிருந்த அனுவுக்கு `மிஸ் இந்தியா 2018' மகுடத்தைச் சூட்டியவர் 2017-ன் `உலக அழகி மனுஷி சில்லர். 

Evening Gown Contest


இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியான `ஈவ்னிங் கவுன் ராம்ப் வாக்கில்', பிரபல ஆடைவடிவமைப்பாளர் தாமஸ் ஆப்ரஹாமின் கைவண்ணத்தில் உருவான ஆடைகளை அனைத்துப் போட்டியாளர்களும் அணிந்து பூனை நடையிட்டனர். சாம்பல், பச்சை, நீலம் மற்றும் பிரவுன் போன்ற நிறங்களின் ஷேடுகளில் மட்டுமே ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அதில், அனு அணிந்திருந்தது `பிரவுன் ஷேடு ஒன் ஷோல்டர் (One Shoulder) கவுன்'. நேர்த்தியான கல் பதித்த எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த முழு நீள ஹை ஸ்லிட் கவுனில் அனைவரின் பார்வையையும் ஈர்த்தார்.

Traditional Pose of Anukreethy


பாலிவுட்டின் பிரபல இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளருமான கரண் ஜோஹர் மற்றும் நடிகரும் பாடகருமான ஆயுஷ்மான் குரானா இருவரும் தொகுத்து வழங்கிய `மிஸ் இந்தியா 2018'ன் இறுதிச்சுற்றில் கரீனா கபூர், மாதுரி தீட்சித், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோரின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின. கிரிக்கெட் வீரர்கள் இர்ஃபான் பதான் மற்றும் KL ராகுல், பாலிவுட் நடிகர்கள் பாபி டியோல், மலைக்கா அரோரா கான் மற்றும் குணால் கபூர் உள்ளிட்டோர் ஜூரி குழுவில் இருந்தனர். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிக்கட்ட கேள்வி-பதில் போட்டிக்கு, நேவி நிற முழுநீள கவுனில் அழகுச் சிலைபோல் தோற்றமளித்தார் அனு. ஏற்கெனவே `Miss Beautiful Smile' எனும் பட்டதைப் பெற்றிருந்த அனுவுக்குக் கேட்கப்பட்ட கேள்வி,


``வாழ்க்கையின் சிறந்த ஆசிரியர் தோல்வியா? வெற்றியா?"

``என்னைப் பொறுத்தவரை தோல்விதான் சிறந்த ஆசிரியர். ஏனென்றால், தொடர்ச்சியான வெற்றி ஒரு கட்டத்தில் மனநிறைவைக் கொடுத்து, மேலும் வளர்ச்சியை நிறுத்திவிடும். ஆனால், தொடர்ச்சியான தோல்வி, உங்கள் இலக்கை அடைவதற்கான தூண்டுதலையும் கடின உழைப்பையும் அதிகரிக்கச் செய்யும். கிராமத்திலிருந்து தொடங்கிய என் பயணம் பல போராட்டங்களை கடந்து, இன்று நான் இங்கு இருக்கக் காரணமும் நான் சந்தித்த தோல்விகள்தாம். என் அம்மாவைத் தவிர யாரும் என்னை ஆதரிக்கவில்லை. தோல்விகள் மற்றும் விமர்சனங்கள் மட்டுமே என்னை இந்தச் சமூகத்தின் நம்பிக்கையான சுதந்திரப் பெண்ணாக மாற்றியது. அனுபவமே சிறந்த ஆசிரியர் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன். அதனால், முயற்சி செய்யுங்கள். தோல்விகள் முற்றுகையிட்டாலும், வெற்றி உங்களை நிச்சயம் விரும்பும்" என்று பதிலளித்து அனைவரின் கைத்தட்டல்களையும் அள்ளிச்சென்றார்.

Miss India 2018


போட்டியின் மகுடம் சூட்டும் விழாவின்போது, 2017-ம் ஆண்டின் இந்திய இன்டெர்-கான்டினென்டல் அழகி பிரியங்கா குமாரி, இந்திய யுனைடெட் கான்டினென்ட் அழகி சனா துவா மற்றும் உலக அழகி மனுஷி சில்லர் மேடையேறி வெற்றியாளர்களை கவுரவித்தனர். இதில், ஆந்திரப் பிரதசத்தைச் சேர்ந்த ஷ்ரேயா ராவ் மூன்றாம் இடத்தையும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மீனாட்சி சவுதரி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!