வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (21/06/2018)

கடைசி தொடர்பு:16:20 (21/06/2018)

``ஆர்கானிக் முத்திரை கடைகளுக்கும் கஸ்டமருக்கும் நல்லது... விவசாயிக்கு?”- வலுக்கும் எதிர்ப்பு

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-யின் நடைமுறையானது பெரிய கார்ப்பரேட் நிறுவன ஆர்கானிக் கடைகளுக்குத்தான் வழிவகுக்கும். இத்திட்டத்தால் இயற்கை விவசாயம் வளர எந்த வழிகளும் இல்லை.

``ஆர்கானிக் முத்திரை கடைகளுக்கும் கஸ்டமருக்கும் நல்லது... விவசாயிக்கு?”- வலுக்கும் எதிர்ப்பு

இயற்கை உணவுப் பொருள்களின் தரத்தினை உற்பத்தி செய்யவும், அதனை விற்பனை செய்யவும் மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயப் பொருள்களின் பக்கம் மக்கள் தங்கள் பார்வையைத் திருப்பியிருக்கும் சூழலில், ஆர்கானிக் கடைகள் பெருகி வந்து கொண்டிருக்கின்றன. இதனால் மக்களுக்கு நம்பகத்தன்மை உள்ள ஆர்கானிக் கடைகளை அறிந்துகொள்ள முடியாத நிலையே இருந்து வருகிறது. போலி ஆர்கானிக் கடைகளையும், போலி ஆர்கானிக் உணவுப் பொருள்களையும் களைவதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) இந்த நடைமுறை கொண்டு வந்துள்ளது. அதன்படி இயற்கை விவசாயம் செய்யும் ஒரு விவசாயி எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ முத்திரை வாங்க வேண்டும். அப்போதுதான் ஆர்கானிக் கடைகளில் இயற்கை விவசாயிகள் தங்கள் பொருள்களை விற்பனை செய்ய முடியும். இதனால் ஆர்கானிக் விவசாயப் பொருள்களை சந்தையில் விற்பது அதிகமாகும் என்று சொல்லப்பட்டாலும், இது இயற்கை விவசாயிகளைத் தண்டிக்கும் ஒரு திட்டமாகவும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

விலை பொருட்கள்

ஆர்கானிக் முத்திரை குறித்து இயற்கை விவசாய ஆர்வலர் `அறச்சலூர்' செல்வத்திடம் பேசினோம். ``எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறை வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதிலுள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இந்தப் புதிய அறிக்கையின்படி உண்மையான ஆர்கானிக் பொருள்களை கடைகளில் விற்பனை செய்கிறார்களா என்று கண்டறியலாம். வாடிக்கையாளருக்கும், கடை வியாபாரிகளுக்கும் நன்மை கொடுத்தாலும், இயற்கை விவசாயிகளுக்குத் துன்பத்தைத்தான் கொடுக்கும். இத்திட்டம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வாங்கி வராமல் நேரடியாக எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ கொண்டு வந்திருக்கிறது. வரும் ஜூலை 1 முதல் இயற்கை விவசாயப் பொருள்களில் ஆர்கானிக் முத்திரை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சார்பில் ஆர்கானிக் முத்திரை கொடுக்க மொத்தம் 89 நிறுவனங்கள்தாம் இருக்கின்றன. அவர்களால் எப்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து இயற்கை விவசாயிகளுக்கும் கொடுக்க முடியும். இதில் சில தனியார் நிறுவனங்களும் ஆர்கானிக் முத்திரை கொடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. சிறு விவசாயிகள்(small farmers) என்று ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளார்கள். அது எந்த அளவு நிலம் வைத்திருக்கும் விவசாயி என்பதையும் சொல்லவில்லை. இதனால் அதிகாரிகள் தங்கள் இஷ்டம் போல முத்திரை கொடுப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. 

அறச்சலூர் செல்வம்இதுதவிர, ஆர்கானிக் சான்றிதழை விவசாயிகள் பெறுவதிலேயே அதிகமான சிக்கல்கள் இருக்கின்றன. இயற்கை விவசாயிகள் உடனே சான்றிதழ் பெற முடியாது. அதிகாரிகள் வந்து நிலத்தைப் பார்வையிட்டு, ஆராய்ந்து சான்றிதழ் கொடுக்கும்போது காலம் விரயமாகும். அதேபோல சான்றிதழ் பெறுவதற்கான கட்டணமும் அதிக அளவில் இருக்கும். நீண்ட காலமாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளும் இத்திட்டத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். முதல் முறை சான்றிதழ் வாங்க அனுமதி கேட்கும்போது, மூன்று வருடங்கள் கழித்துதான் ஆர்கானிக் சான்றிதழே கிடைக்கும். அதுவரை ஆர்கானிக் என்று சொல்லி விற்பனை செய்ய முடியாது. அதனால் இயற்கை முன்னோடி விவசாயிகளின் உற்பத்தி பாதிக்கப்படும். இத்திட்டத்தினுள் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தும். இதற்கு சிக்கிம் மாநிலமும் விதிவிலக்கு அல்ல. இதனால் பாரம்பர்ய இயற்கை விவசாயிகள் கூட கால விரயம், நிறுவனங்களின் அலைக்கழிப்பு எனப் பல இன்னல்களுக்கு ஆளானால் நிச்சயமாகச் செயற்கை விவசாயத்துக்கு மாறுவர். இவர்கள் ரசாயனக் கொல்லிகளுக்குத் தடை விதித்தால் இவ்வளவு பெரிய வரைமுறை தேவையில்லை. அனைத்துமே இங்கு இயற்கையான பொருளாகக் கிடைத்துவிடும். 

ஆர்கானிக் முத்திரை

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-யின் நடைமுறையானது பெரிய கார்ப்பரேட் நிறுவன ஆர்கானிக் கடைகளுக்குத்தாம் வழிவகுக்கும். இத்திட்டத்தால் இயற்கை விவசாயம் வளர எந்த வழிகளும் இல்லை. ஆர்கானிக் சான்றிதழ் வாங்கும் நடைமுறை இயற்கை விவசாயிகளைத் தண்டிக்கும் ஒரு செயல். இங்கே போலி ஆர்கானிக் கடைகளை களைவது அவசியம்தான். அதற்காக முறையான திட்டத்தைத்தான் செயல்படுத்தக் கேட்கிறோம். இப்போது நடைமுறைக்குக் கொண்டு வரப்போகும் திட்டத்தில் உள்ள மிகப்பெரிய குறைகளை எல்லாம் சரி செய்த பின்னர் கொண்டு வரலாம். இதைச் செயல்படுத்த வேண்டுமானால் மாவட்டத்துக்கு ஓர் ஆய்வகம் அமைத்து அனைத்து இயற்கை விவசாயிகளுக்கும் எளிதான முறையில் ஆர்கானிக் சான்றிதழ் கொடுக்கலாம். இதற்கு மத்திய அரசுதான் ஒரு தீர்வைக் கொண்டு வரவேண்டும்" என்றார். 
 


டிரெண்டிங் @ விகடன்