வெளியிடப்பட்ட நேரம்: 03:59 (22/06/2018)

கடைசி தொடர்பு:09:58 (22/06/2018)

அரசு மருத்துவமனைக்கு சூட்டப்பட்ட நிபா வைரஸால் இறந்த நர்ஸின் பெயர்..! - கூகுள் நிறுவனத்திடம் புகார்

கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்கி இறந்த நர்ஸ் லினி பெயரை பேராம்பிறா தாலுக்கா அரசு மருத்துவமனைக்கு சூட்டியுள்ளதாக, சமூக வலைதளங்களில் புரளி கிளம்பியது. இதை கூகுள் மேப்பில் அப்லோடு செய்தவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என கூகுள் நிறுவனத்துக்கு மருத்துவமனை அதிகாரிகள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

கோழிக்கோடு மாவட்டத்தில், நிபா வைரஸ் தாக்கி இறந்த நர்ஸ் லினி பெயரை பேராம்பிறா தாலுகா அரசு மருத்துவமனைக்கு சூட்டியுள்ளதாக சமூக வலைதளங்களில் புரளி கிளம்பியது. இதை கூகுள் மேப்பில் அப்லோடு செய்தவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என கூகுள் நிறுவனத்துக்கு மருத்துவமனை அதிகாரிகள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

அரசு மருத்துவமனை

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பரவிய நிபா வைரஸ் காய்ச்சல், கடந்த மாதம் சுமார் 20 பேர் உயிரை காவு வாங்கிவிட்டது. வைரஸ் பாதித்த நோயாளிகளைப் பராமரித்த செவிலியர்களும் இறந்துபோன துயரம் அங்கு நடந்தது. நிபா வைரஸுக்கு பலியான முதல் நர்ஸ் லினி குறித்த செய்திகள் இந்திய அளவில் கவனம்பெற்றன. நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து கேரளம் முற்றிலும் விடுபட்டுள்ள நிலையில், கோழிக்கோடு மாவட்டம் பேராம்பிறா அரசு தாலுக்கா மருத்துவமனைக்கு லினி பெயரை சூட்ட வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில், பேராம்பிறா அரசு தாலுக்கா ஆஸ்பத்திரிக்கு லினி பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டுவருகிறது.

கூகுள்

கூகுள் மேப்பில் கூட 'ஏஞ்சல் லினி நினைவு அரசு தாலுக்கா மருத்துவமனை' என லேண்ட் மார்க்-கை யாரோ மாற்றி அமைத்திருக்கிறார்கள். இந்த விஷமத்தனத்தைச்  செய்தவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் எனவும், லேண்ட் மார்க்கை மீண்டும் பழையபடி மாற்றி அமைக்க வேண்டும் எனவும் மருத்துவமனை அதிகாரிகள் கூகுள் நிறுவனத்துக்கு புகார் அனுப்பியுள்ளனர். அரசு ஆஸ்பத்திரியின் பெயர் மாறியதாக வதந்தி கிளப்பிய விவகாரம், கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.