வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (22/06/2018)

கடைசி தொடர்பு:14:08 (23/06/2018)

லாலுவுக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதித்த நீதிபதியின் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்தனர். 

நீதிபதி வீட்டில் கொள்ளை

Photo Credit: ANI

பீகார் மாநிலத்தில் 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில், லாலு உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்து அவர்களுக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். 

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஜலவுன் மாவட்டத்தில் உள்ள நீதிபதி ஷிவ்பால் சிங்கின் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள நீதிபதி ஷிவ்பால் சிங்கின் சகோதரர் சுரேந்திரா, ரூ.60,000 ரொக்கம், ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.