'என்.ஜி.ஓ பெண்களைக் கடத்திய மர்ம கும்பல்!'- துப்பாக்கிமுனையில் நடந்த கொடுமை | Five women from ngo, gang-raped at gunpoint in jharkhand

வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (22/06/2018)

கடைசி தொடர்பு:19:13 (22/06/2018)

'என்.ஜி.ஓ பெண்களைக் கடத்திய மர்ம கும்பல்!'- துப்பாக்கிமுனையில் நடந்த கொடுமை

விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்தச் சென்ற ஐந்து இளம்பெண்களை, துப்பாக்கிமுனையில் கடத்திச்சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கும்பல்குறித்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

என்.ஜி.ஓ

ஜார்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டம் கோச்சாங் கிராமத்தில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களிடம் புலம்பெயர்தல், ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர். கடந்த 19-ம் தேதியன்று அப்பகுதியில் விழிப்பு உணர்வு நாடகம் ஒன்றை நடத்தியுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள், துப்பாக்கி முனையில் ஐந்து பெண்களைக் கடத்தியுள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. பெண்களைக் கடத்திச்சென்ற கும்பல், மூன்று மணி நேரத்துக்குப் பிறகே விடுவித்துள்ளது. 'அடர்ந்த காட்டுப் பகுதிக்குக் கொண்டுசென்று, துப்பாக்கி முனையில் மிரட்டி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக'த் தெரிவிக்கின்றனர் போலீஸார். 

இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி அஸ்வினி குமார் சின்ஹா, `` கிறிஸ்தவ மிஷனரிகள் சார்பில் செயல்பட்டுவரும் என்.ஜி.ஓ-வைச் சேர்ந்த ஐந்து பெண்களை அடையாளம் தெரியாத கும்பல் வன்கொடுமை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமையைத் தொண்டு நிறுவனத்திடம் தெரிவிக்கவில்லை. இவர்கள் ஐந்து பேரும் வன்கொடுமை செய்யப்பட்டது, மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதன் பின்னரே, போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்து, மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவருகிறோம்'' என்றார்.