வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (22/06/2018)

கடைசி தொடர்பு:14:03 (23/06/2018)

'ஒப்பிட்டுப் பார்த்து பதில் சொல்லுங்கள்!' -ஆசாத்துக்கு சவால்விட்ட ரவிசங்கர் பிரசாத்

`பா.ஜ.க அரசின் ஆட்சியையும் காங்கிரஸ் ஆட்சியையும் ஒப்பிட்டு, வித்தியாசங்களைப் பாருங்கள்' என குலாம் நபி ஆசாத்திடம் , மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார். 

ரவிசங்கர் பிரசாத்

காஷ்மீரில் மக்கள், ஜனநாயகக் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை கடந்த 19-ம் தேதியன்று பா.ஜ.க வாபஸ் பெற்றது. இதனால், காஷ்மீரில் நடந்துவந்த மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. தற்போது, காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், `மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு இடம் இல்லை; கடந்த மூன்று ஆண்டுகளாக ராணுவ வீரர்களும் பொதுமக்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்' எனத் தெரிவித்திருந்தார். 

இவரின் கருத்துக்கு இன்று பதிலளித்துள்ள சட்டம் மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், `ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியின்போது, கடந்த 2012-ம் ஆண்டில் 72 தீவிரவாதிகளும் 2013-ம் ஆண்டில் 67 தீவிரவாதிகளும் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், பா.ஜ.க ஆட்சிக்குப் பிறகு, 2014-ல் 110, 2015-ல் 108, 2016-ல் 150 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, எங்கள் ஆட்சிக்கும் உங்கள் ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு, வித்தியாசங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்றார்.