'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர்

உலக நாடுகள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் குடியேற்றச் சீர்திருத்தக் கொள்கையை திட்டித்தீர்க்கும் நிலையில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் ட்ரம்ப்பின் படத்துக்கு தினமும் பூஜை புனஸ்காரம் செய்துவருகிறார். 

ட்ரம்ப் பக்தர்
 

கேட்கவே ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது அல்லவா? 

தெலங்கானாவின்  ஜன்கவுன் மாவட்டத்தில், கோனே என்னும் குக்கிராமம் அமைந்துள்ளது. இங்குதான் ட்ரம்ப்பின் விசிறி (பக்தர்!) பூசா கிருஷ்ணா வசித்துவருகிறார். 31 வயதான  பூசா கிருஷ்ணா விவசாயம் செய்துவருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர், ட்ரம்ப்புக்கு பூஜைசெய்து வழிப்பட்டுவருகிறார். ட்ரம்ப்பின் படத்துக்கு பூக்கள் வைத்து, ஆரத்தி எடுத்த பின்னர்தான், இவரின் காலைப் பொழுது விடியும். பூஜை செய்வது மட்டுமின்றி அந்தப் புகைப்படங்களைத் தன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து பெருமிதம்கொள்வது பூசா கிருஷ்ணாவின் வழக்கம். ஃபேஸ்புக், ட்விட்டரில் இவரைப் பற்றி செய்தி பரவ, இவரைத் தேடி தெலங்கானாவுக்கு  ஊடகங்கள்  படை எடுத்தன. 

ட்ரம்ப்
 

ட்ரம்ப் மீது ஏன் இவ்வளவு பக்தி? என்று ஆங்கில ஊடகம் Hindustan Times அவரிடம் கேள்வியெழுப்பியது. அதற்கு பூசா கிருஷ்ணா அளித்த அடடே பதில் பின்வருமாறு...

 `கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா அமெரிக்காவில் கொல்லப்பட்டார் நினைவிருக்கிறதா? அவர் தெலங்கானாவைச் சேர்ந்தவர். அவரை வெறுப்புணர்ச்சி காரணமாக அமெரிக்கர் கொன்றுவிட்டார். அந்தச் சம்பவம் என்னை சோகத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து என்னால் நேரடியாக ட்ரம்ப்பிடம் பேச முடியாது. எனவே, அவருக்கு பூஜை செய்ய முடிவெடுத்தேன். என் வேண்டுதல் அவரைப் போய் சேரும் என்று நம்புகிறேன். இந்தியர்கள், தங்கள் ஆன்மிக சக்தியால் எதையும் சாதிக்கும் திறன் உடையவர்கள். என் அன்பாலும், பக்தியாலும் ட்ரம்ப்பை வெல்வேன். நான் ட்ரம்ப்புக்கு பூஜை செய்வதை நிறையப் பேர் பைத்தியக்காரத்தனம் என்று சொல்கிறார்கள். இந்தக் குக்கிராமத்தில் செய்யும் பூஜை, அமெரிக்காவில் உள்ளவருக்கு எப்படிக் கேட்கும் என்கிறார்கள். ஆனால், எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

பூசா கிருஷ்ணா ட்ரம்ப்புக்கு அபிஷேகம் செய்யும் வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.. 

ட்ரம்ப், வெல்ல முடியாத உலகத் தலைவர். அவர், தைரியமாக முடிவெடுக்கக்கூடியவர். எதற்கும் அஞ்சாதவர். ட்ரம்ப்  WWF போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடியவர் என்பதால்,அவர் சக்திவாய்ந்தவராக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார் நெகிழ்ச்சியாக. பூசா கிருஷ்ணாவின் ஃபேஸ்புக் பக்கத்தை அலசிப் பார்த்தால், கொஞ்சம் தலை சுற்றத்தான்செய்கிறது. இந்த ட்ரம்ப் பக்தரை நினைத்து வருந்துவதா, சிரிப்பதா?
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!