ஒரு இந்திய குடிமகனுக்கு மருத்துவத்துக்காக இந்தியா எவ்வளவு செலவழிக்கிறது?

இந்திய மதிப்பில் சுமார் 1112 ரூபாய் (நாள் ஒன்றுக்கு 3 ரூபாய்) என்ற அளவுக்கு மக்களுக்கு மருத்துவத்துக்காக இந்திய அரசு செலவழிக்கிறது. 

ஒரு இந்திய குடிமகனுக்கு மருத்துவத்துக்காக இந்தியா எவ்வளவு செலவழிக்கிறது?

இந்தியாவில் 100 ரூபாய்க்கும் குறைவாக என்ன பொருள் வாங்கலாம் என்றால் பல பொருட்களை பட்டியலிட முடியும். ஒரு ப்ளேட் சாம்பார் வடை... வாட்சுக்கான பேட்டரி... ஓர் ஆங்கில சினிமா பத்திரிகை... ஆனால், அந்தத் தொகைதான் சராசரியாக ஓர் இந்தியனால் ஒரு மாதத்தில் செய்ய முடிகிற மருத்துவச் செலவு என்றால் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இந்தியச் சுகாதாரத் துறை அளித்துள்ள அறிக்கையில் ஒரு மாதத்துக்கு ஒரு இந்திய குடிமகனுக்கு ஆகும் மருத்துவ செலவு என்பது 93 ரூபாய் என்று கணக்குக் காட்டியுள்ளது. இதன்படி ஒரு வருடத்துக்கு ஒரு நபருக்கு 16 அமெரிக்க டாலர்கள் மருத்துவச் செலவு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,112 ரூபாய். சரியாகச் சொல்ல வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய் என்ற அளவுக்கு மக்களுக்கு மருத்துவத்துக்காக இந்திய அரசு செலவழிக்கிறது.

மருத்துவச் செலவு

2009-ம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து மொத்த ஜி.டி.பி-யில் (Gross domestic product) மருத்துவச் செலவு என்பது 1.02 சதவிகிதமாகவே உள்ளது. இது குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளைவிடவும் குறைவாகும். மொத்த ஜி.டி.பி-யில் மாலத்தீவு 9.4 சதவிகிதத்தையும் இலங்கை 1.6 சதவிகிதத்தையும் பூடான் 2.5 சதவிகிதத்தையும் மருத்துவத்துக்காகச் செலவழிக்கிறது. இந்தியாவின் மருத்துவ மற்றும் ஆரோக்கியக் கொள்கையின்படி 2025-க்குள் ஜி.டி.பி-யில் பொதுமக்கள் ஆரோக்கியத்துக்கான பங்கை 2.5 சதவிகிதமாக உயர்த்துவது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2010-க்கான இலக்கான 2 சதவிகிதத்தையே இன்னமும் எட்டவில்லை. ஜி.டி.பி-யையும், பொதுமக்களின் ஆரோக்கியச் செலவையும் ஒப்பிட்டால் குறைவான தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளைவிட 0.4 சதவிகிதம் இந்தியா குறைவாகச் செலவு செய்கிறது.

இந்திய மாநிலங்களில் மருத்துவத்துக்கான ஒரு தனிநபருக்கு அதிகம் செலவழிக்கும் மாநிலம் மிசோரம். ஆண்டுக்கு ஒருவருக்கு 5,862 ரூபாய் செலவழிக்கிறது. குறைவாகச் செலவழிக்கும் மாநிலம், உத்திரபிரதேசம். ஒரு தனிநபருக்கு 733 ரூபாய் மட்டுமே செலவழிக்கிறது. தமிழகம் இதே விஷயத்துக்காகத் தனிநபருக்கு 1,235 ரூபாய் செலவழிக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 100 பேரில் 6 பேருக்குத் தவறான மருந்துகள் மூலமாகவோ அல்லது மருந்துகளின் செயல்பாட்டில் உள்ள மாற்றங்கள் காரணமாகவோ மருத்துவத் தவறுகள் நேர்கின்றன. வளரும் நாடுகளில், அதிக மருத்துவத் தவறுகள் நிகழும் நாடுகள் பட்டியலில், இந்தியா முன்னணியில் உள்ளது. உலகச் சுகாதார அமைப்பின் தகவல்படி, ‘1,000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர்’ என்ற விகிதத்தில் மதிப்பிட்டால், இந்தியாவில் ஐந்து லட்சம் மருத்துவர்களுக்கான தேவை உள்ளது. தற்போதுள்ள நிலையின்படி 1,674 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்த நிலைமை வியட்நாம், அல்ஜீரியா மற்றும் பாகிஸ்தானைவிடவும் மோசமானது.

இந்தியா மருத்துவம்

உலகச் சுகாதார அமைப்பின் தரவரிசைப்படி மருத்துவம் முறையாகவும் தரத்தோடும் வழங்கப்படும் நாடுகளின் தரவரிசையில் இந்தியா 112-வது இடத்தைப் பிடித்துள்ளது. ‘வளர்ந்துவரும் நாடுகள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளின் தரம் மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கிறது.

இந்த அளவில் நிதி ஒதுக்கினால் இந்தியாவில் பிரசவத்தின்போது இறக்கும் குழந்தைகளின் விகிதத்தை 2019-க்குள் குறைப்பதாகக் கூறியுள்ள இலக்கை அடைவது கடினம் என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது. இந்தியாவில் போதிய மருத்துவ வசதிகளும், போதிய மருத்துவ உள்கட்டமைப்புகளும் இன்றி மக்கள் தவிக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் என்பது பொதுமக்களால் பயன்படுத்த முடியாத விலையில் இருப்பதும் மருத்துவத்துக்கான தேவையை அதிகரிக்கச் செய்கிறது. அரசு பட்ஜெட்டில் தனிநபர் மருத்துச் செலவுக்கான தொகையை அதிகரித்தால் மட்டுமே இந்தியா மருத்துவ தன்னிறைவு கொண்ட நாடாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!