வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (23/06/2018)

கடைசி தொடர்பு:10:57 (23/06/2018)

`2000 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய தந்தை, மகள்' - சட்டசபைக்கு அழைத்துப் பாராட்டிய மாநில அரசு!

திரிபுராவில் தக்க நேரத்தில் ரயிலை நிறுத்திப் பெரும் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க உதவிய தந்தை மற்றும் மகளை அம்மாநில அமைச்சர் கௌரவப்படுத்தியுள்ளார். 

தந்தை - மகள்

திரிபுராவின் தன்சேரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வபன் தெப்பர்மா. மூங்கில் தொழில் மேற்கொண்டு வரும் இவர், கடந்த 15ம் தேதி தனது மகள் சோமதியுடன் (9 வயது) காட்டுப்பகுதிக்கு மூங்கில் சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது பெய்த மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவை அறியாமல் அந்த வழியே பயணிகள் ரயில் ஒன்று வந்துள்ளது. மண் சரிவால் ரயில் விபத்து ஏற்படும் என்பதை அறிந்த தந்தையும், மகளும் உடனடியாக தங்களது சட்டைகளைக் கழற்றி ரயிலை நிறுத்தும்படி கூச்சல் எழுப்பினர். இதனைப் பார்த்த ரயில் ஓட்டுநர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தினர். 

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு சுமார் 2000 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரவ, பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய தந்தைக்கும், மகளுக்கும் பாராட்டுகள் குவிந்தது. இவர்களின் செயலை அறிந்த மாநில அரசும் இவர்களைச் சட்டசபைக்கு வரவழைத்துப் பாராட்டியது.

மேலும் இவர்களுக்கு மாநில அரசின் சார்பில் சன்மானம் வழங்கப்படவும், ரயில்வே சன்மானம் வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு ஒருபடி மேலாக, திரிபுரா மாநிலச் சுகாதாரத்துறை அமைச்சர் சுதிப் ராய் பர்மன் அவர்கள் இருவரையும் தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்று விருந்து அளித்துக் கௌரவப்படுத்தினார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க