வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (23/06/2018)

கடைசி தொடர்பு:12:08 (23/06/2018)

`ஏ.சி- களில் இனி 24 டிகிரி செல்சியஸ் அளவீடு'- மத்திய அமைச்சர் தகவல்

``இனி பயன்படுத்தும் ஏ.சி-களில் 24 டிகிரி செல்சியஸ் இயல்புநிலை அளவீடாக, மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது'' என மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.சிங்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ஏ.சி-யில் ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் உயர்த்தும்போது, ஆறு சதவிகித மின்சாரம் சேமிக்கப்படுகிறது. ஆனால், ஓட்டல்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் ஏ.சி-யின் தற்போதைய வெப்பநிலை அளவு 18 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும். 

ஜப்பான் போன்ற நாடுகளில் வடிவமைக்கப்படும் ஏ.சி-களில் இயல்பு நிலை அளவு 28 டிகிரி செல்சியஸாக நிர்ணயம் செய்யப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. மின்சாரத்தைச் சேமிக்க இதுபோன்ற முயற்சிகளை பல்வேறு நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இதேபோன்று, இந்தியாவிலும் மின்சாரம் சேமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, ஏ.சி உற்பத்தியாளர்களுடன் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில், வரும் காலங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏ.சி பெட்டிகள் 24 டிகிரி முதல் 26 டிகிரி செல்சியல் இயல்புநிலை அளவீடாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நடைமுறை குறித்து மக்களிடம் நான்கு அல்லது ஆறு மாதங்களில் விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்தப்படும். அதன்பின்னர், கருத்துகளைச் சேகரித்து அமைச்சகம் பரிசீலிக்கும்' என்று குறிப்பிட்டார்.