ஏ.டி.எம் இயந்திரத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய சேட்டைக்கார எலி இறந்தது இப்படிதான்!

எலி

சில நாள்களுக்கு முன்னர் அசாமில் ஏ.டி.எம் இயந்திரத்தில் எலி நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.    
அசாம் மாநிலம், கவுகாத்தி மாவட்டத்தில் உள்ள டின்சுகியா என்னும் பகுதியில்தான் இந்த விசித்திர சம்பவம் நடந்தது. டின்சுகியா பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் கடந்த மே 19-ம் தேதி அதிகாரிகள் பணம் நிரப்பியுள்ளனர். ஆனால், அதற்கு அடுத்த நாளிலிருந்து அந்த இயந்திரம் வேலை செய்யவில்லை.

வங்கி கிளைக்குப் புகார் வந்ததும், நிரப்பப்பட்ட பணத்துடன் ஏ.டி.எம் இயந்திரம் மூடப்பட்டுவிட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு ஏ.டி.எம் இயந்திரத்தைச் சரி செய்வதற்காகக் கடந்த ஜூன் 11ம் தேதி அதிகாரிகள் ஏ.டி.எம் அறையைத் திறந்துள்ளனர். அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏ.டி.எம் அறை முழுக்க ரூபாய் நோட்டுகள் சிறு சிறு துண்டுகளாகச் சிதறிக்கிடந்தன. ரூபாய் நோட்டுகள் மத்தியில் ஓர் எலி இறந்து கிடந்தது. அந்த எலிதான் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பணத்தை கடித்துக் குதறி நாசம் செய்திருக்கக்கூடும் என அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். பணம் சிதறிக்கிடந்த காட்சியை உள்ளூர் ஊடகங்கள் புகைப்படம் எடுத்து செய்தியாக்கியது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின.   

எலி
 

இந்நிலையில் ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் எலி எப்படிப் புகுந்தது? இந்தியாவில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்கள் பெரும்பாலும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் நிறுவப்பட்டிருக்கும். குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ-யில் அனைத்து ஏ.டி.எம் இயந்திரங்களிலும் closed-circuit கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இத்தனை விஷயங்களைத் தாண்டி எலி எப்படி ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் நுழைய முடியும்? எஸ்.பி.ஐ வங்கி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இந்தச் சம்பவம் மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும். சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 10 நாள்களுக்குள் பின்னர், டின்சுகியா பகுதி எஸ்.பி.ஐ வங்கியின் கிளை மேலாளர் சந்தன் ஷர்மா இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

 `இது ஓர் அரிய நிகழ்வு. இதற்கு முன்னர் இப்படி நடந்தது இல்லை. இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். ஒரு சின்னத் துளை வழியாக ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் எலி நுழைந்துள்ளது. 20,000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைக் கடித்துக் குதறியுள்ளது. அதன்பின்னர் ஏ.டி.எம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட closed-circuit கேமராவைக் கடித்து விழுங்கியுள்ளது. எலி இறந்து போனதற்கு காரணம் அந்த கேமராவை கடிக்க முயன்றதால்தான்’ என்றார். 

ரூபாய் நோட்டுகளை துவம்சம் செய்ததோடு விடாமல் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த அதிநவீன கேமராவை உணவாகச் சாப்பிட முயற்சி செய்து இறந்துள்ளது இந்தச் சேட்டைக்கார எலி! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!