`சுஜாத் புஹாரியின் நிலை தான் உங்களுக்கும்' - பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கும் பாஜக தலைவர்!

பத்திரிகையாளர்கள் தங்களுக்கு என ஒரு வரையறை ஏற்படுத்தவில்லையெனில் சுஜாத் புஹாரி நிலைதான் ஏற்படும் என காஷ்மீர் பாஜகவின் மூத்த தலைவர் லால் சிங் மிரட்டல் விடுத்துள்ளார். 

லால் சிங்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகர் பகுதியிலிருந்து வெளிவரும்  `ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி, கடந்த 14- ம் தேதி காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கெளரி லங்கேஷ், சாந்தனு பெளமிக் எனத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டு வருவதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. சமீபத்தில் பாஜக - பிடிபி கூட்டணி முறிந்ததற்கு சுஜாத் புஹாரி கொலை சம்பவம் முக்கிய காரணியாக இருந்தது. இந்நிலையில், காஷ்மீர் மாநில பாஜக மூத்த தலைவர் லால் சிங், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர்,  ``காஷ்மீர் பத்திரிகையாளர்கள் இங்கு ஒரு தவறான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் தங்களுக்கு என ஒரு வரையறை ஏற்படுத்தவேண்டும். அப்போது தான் இங்குச் சகோதரத்துவம் பராமரிக்கப்பட்டு முன்னேற்றம் ஏற்படும். அவ்வாறு செய்யவில்லை எனில், சுஜாத் புஹாரிக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும் நேரும்" என மிரட்டல் தொனியில் பேசினார். இந்த லால் சிங் தான் கத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்துகொண்டு, பின்னர் தனது அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, பத்திரிகையாளர்கள் குறித்த இவரது பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!