வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (24/06/2018)

கடைசி தொடர்பு:14:20 (24/06/2018)

`முட்டாள்கள் தினத்தில் வாக்குறுதி அளித்துவிட்டார்' - பிரதமரைக் கிண்டலடிக்கும் ராகுல்!

`பிரதமர் நரேந்திர மோடி, முட்டாள்கள் தினத்தில் வாக்குறுதி அளித்து ஒடிசா மக்களை ஏமாற்றிவிட்டார்' எனக் குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

ராகுல்

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி ஒடிசாவின் ரூர்கேலா சென்றிருந்தார். பிரசாரத்தின்போது,  `ரூர்கோலா நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் முறையான சுகாதார வசதிகள் இல்லை. பொதுச்சுகாதார மருத்துவமனைகள் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் அமைக்கப்படும்' என வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் வாக்குறுதிகள் நிறைவேற்றித் தரவில்லை. இதனையடுத்து 'தேர்தல் பிரசாரத்தின்போது எங்கள் கிராம மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை?' என்ற கேள்வியை முன்னிறுத்தி, பிரதமர் மோடிக்கு எதிராக நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார் ரூர்கேலா இளைஞர் முக்திகாந்த் பிஸ்வால். 

இந்தச் சம்பவத்தை முன்வைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, பிரதமரை விமர்சித்துப் பதிவிட்டதுடன், வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவரின் பதிவில்,  `ஏப்ரல் 01, 2015-ம் ஆண்டு, முட்டாள்கள் தினத்தையொட்டி ஒடிசா மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஜோக் அடித்து விளையாடியுள்ளார். அதனால், பிரதமர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற காங்கிரஸ் முன்வந்துள்ளது. இதற்காக, உங்களால் முடிந்த அளவிற்கு நிதி உதவி செய்யுங்கள்' எனப் பதிவிட்டு நிதி உதவி செலுத்துவதுக்கான லிங்க் ஒன்றையும் இணைத்துள்ளார் ராகுல்.