வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (24/06/2018)

கடைசி தொடர்பு:16:34 (24/06/2018)

'மனதின் குரல்' பேசும் பிரதமர் மோடி, நாட்டு மக்களின் மனநிலையை அறிவாரா?

'மனதின் குரல்' பேசும் பிரதமர் மோடி, நாட்டு மக்களின் மனநிலையை அறிவாரா?

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தாண்டு மே மாதம் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், இன்னும் பொருளாதார விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டிவிடும்; விவசாயிகளின் வருவாய் 2022-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காகி விடும் என்று தொடர்ந்து, பிரதமர் மோடியும், பி.ஜே.பி. அரசின் மத்திய அமைச்சர்களும் கூறி வருகிறார்கள். 

மோடி - அமித் ஷா

நான்காண்டுகளுக்கு முன், அதாவது 2014-ஆம் ஆண்டு மே மாதம் முன்னெப்போதும் இல்லாதவகையில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து, அரசை உருவாக்கியதும், 'வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை முற்றிலுமாக மீட்டு இந்தியா கொண்டுவருவோம்; சாமான்யர்களின் வாழ்வில் ஒளி வீசச் செய்வோம்; ஏழை, எளிய மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவோம்' போன்ற பல்வேறு வாக்குறுதிகளை பி.ஜே.பி-யும், அரசுக்குத் தலைமை வகிக்கும் மோடியும் அளித்தனர்.

ஆனால், அண்மையில் குஜராத்தில் அமித் ஷா இயக்குநராக உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பல கோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக, எந்தக் கருத்தையும் ஆட்சியாளர்கள் தெரிவிக்க மறுக்கிறார்கள். மாறாக, சம்பந்தப்பட்ட தகவலுக்குக் காரணமான நபார்டு வங்கியிடம் இருந்து மறுப்பு அறிக்கை வருகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட சாதனைகள்தான், கடந்த நான்காண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படி உள்ளன என்றால், அந்த இரு பாதிப்புகளாலும் வாழ்வாதாரத்தை இழந்தோர் கொதித்தெழுவார்கள். ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின்னர், பெரும்பாலான அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பதை, நடுத்தர மக்கள் அனைவருமே உணர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான சிறுதொழில் முனைவோர் தங்களின் தொழில் கூடங்களை மூடியுள்ளனர் என்பதற்கு புள்ளிவிவர ஆதாரங்களே சாட்சியாக உள்ளன. 'பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என பிரதமர் மோடி 2016 நவம்பர் 8-ஆம் தேதியன்று அறிவித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள சாமான்ய மக்களும், சம்பளம் பெறுவோரும், அன்றாடம் கூலி வேலை செய்வோரும்தான் வங்கிகளின் வாசல்களின் காத்துக்கிடந்தனர். ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக எந்தவொரு அம்பானியோ, அதானியோ, டாடா-பிர்லாவோ வங்கிகளுக்கு வந்து வரிசையில் நின்றதாகத் தகவல் இல்லை. அதிலும், 'டீமானிட்டைசேஷன்' அறிவிக்கப்பட்டபோது, தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிவு செய்து வைத்திருந்தவர்கள் நிலையோ இன்னும் பரிதாபம். தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்குத்தான் எத்தனை, எத்தனை கட்டுப்பாடுகள்? "நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம், நான்காயிரம், வாரத்திற்குப் பத்தாயிரம் என்று அவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தபோதிலும், இன்றுவரை கறுப்புப் பணத்தை உள்நாட்டிலேயே ஒழித்துவிட்டதாகக் கூறமுடியவில்லை. பின்னர், வெளிநாடுகளில் இருந்து இவர்களால் எப்படி கறுப்புப் பணத்தைக் கொண்டு வர முடியும்?" என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் கேள்வி.

ஆனால், இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனிலும், அகில இந்திய வானொலியிலும் பிரதமர் மோடி மற்றும் அவர் தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனைகள் தொடர்ந்து ஒளி-ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. தவிர, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணமும், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் அவர் ஆற்றும் 'மனதின் குரல்' உரையும் இப்போதுவரை விவாதப் பொருளாகவே நீடித்துக் கொண்டிருக்கின்றன. அதன்படி, இந்த மாதத்தின் கடைசி ஞாயிறன்று பிரதமர் வானொலி மூலம் உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடி தன் உரையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்கள், நாட்டு மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன" என்றார். ஆனால், 'இந்த நான்காண்டுகளில் தங்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா, அவை எந்த மாதிரியானவை' என்பதை நாடு முழுவதும் உள்ள மக்கள்தான் பதில்கூற வேண்டும்.

பிரதம்ர மோடி - மனதின் குரல் உரைமேலும், பிரதமர், "அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் பயனடைந்தவர்களுடன் அண்மையில் நான் மேற்கொண்ட உரையாடல் மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுத்தது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 50 லட்சம் பயனாளிகளுடன் நான் கலந்துரையாடினேன். பொதுசேவை மையங்கள் மூலம் ஓய்வூதியம் முதல் பாஸ்போர்ட் வழங்குதல்வரை பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுநர்களும், தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களும் இணைந்து பெங்களுருவில் உருவாக்கிய அறக்கட்டளை ஒன்று, விவசாயிகளின் வருவாயை வெற்றிகரமாக இரட்டிப்பாக்கிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் இயற்கை வேளாண் உத்திகள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, விவசாயிகள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

நாட்டின் நலன் கருதி அனைத்து மாநிலங்களும் ஜி.எஸ்.டி வரிமுறையை அமல்படுத்த ஒப்புக் கொண்டன. கூட்டான பெடரலஸிசத்திற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம். ஜி.எஸ்.டி-க்கு முன் நாடு முழுவதும் 17 விதமான வரிமுறைகள் அமலில் இருந்தது. ஆனால், தற்போது ஒரே வரி மட்டும் விதிக்கப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற மிகப்பெரிய வரி சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும் என்ற நிலை மாறி, ஒரே ஆண்டில் சிறப்பான முறையில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

வன்முறையும், கொடூரச் செயல்களும் எந்தவொரு பிரச்னையையும் ஒருபோதும் தீர்க்க இயலாது. அமைதி, அகிம்சை, தியாகம் போன்றவையே இறுதியில் வெல்லும். அண்மையில் நான்காவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு நாடுகளிலும், ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் யோகாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லைகளையும், தடைகளையும் கடந்து யோகா அனைவரையும் ஒன்றிணைக்கிறது" என்றார். 

"நாட்டுக்காகத் தியாகம் புரிந்த பல தலைவர்களை நினைவுகூர்வதற்கு காங்கிரஸ் தவறிவிட்டது; முந்தைய ஆட்சியாளர்கள் ஊழலில் திளைத்தார்கள்; கறுப்புப் பணத்தை மீட்கத் தவறிவிட்டார்கள்" என்று இன்னும் எத்தனை முறைதான் குற்றம்சாட்டிக் கொண்டிருப்பீர்கள் பிரதமர் மோடி அவர்களே...? உங்கள் ஆட்சி அமைந்து, நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. இதுவரை, நீங்கள் மீட்டுவந்த கறுப்புப் பணம் எவ்வளவு? வங்கிகளுக்குக் கோடிக் கணக்கில் மோசடி செய்து விட்டு, இந்தியாவில் இருந்து தப்பியோடிய மல்லையா போன்ற தொழிலதிபர்கள் எத்தனை பேர்? அவர்களை இந்தியாவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?" இந்தக் கேள்விகளுக்கும் அடுத்த மனதின் குரல் உரையில், பிரதமர் பதில் கூறுவாரா? அல்லது சாமான்ய மக்களின் அன்றாட நிலைமையை - வாழ்வாதாரப் போராட்டங்களை அவர் அறிந்திருப்பாரா? பிரதமருக்குத்தான் வெளிச்சம்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்