வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (24/06/2018)

கடைசி தொடர்பு:17:20 (24/06/2018)

`இந்திய விமானப் படையில் டீ கடைக்காரரின் மகள்..!' -அசத்தும் ஆஞ்சல் கங்வால்

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த டீக் கடைக்காரரின் மகள், இந்திய விமானப் படை பிரிவில் உள்ள பறக்கும் படைத்தளத்தில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய விமானப் படை

Photo Credit - ANI

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் கங்வால். இவர், அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் டீக் கடை நடத்திவருகிறார். இவரின், மகள் ஆஞ்சல் கங்வால். விமானப் படையில் சேர விரும்பிய ஆஞ்சல், போட்டி தேர்வான Air Force Common Admission Test -யை ஐந்து முறை எழுதியிருக்கிறார். அந்த முயற்சிகளில் தோல்வி அடையவே, கடைசியாக ஆறாவது முறையாகத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். நாடு முழுவதும் ஏர் போர்ஸ் தேர்வை ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இதில், 22 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று, விமான படைப்பிரிவில் பணியாற்றத் தகுதி பெற்றனர். அவர்களில், ஆஞ்சல் கங்வாலும் ஒருவர்.

விமானப் படை

Photo Credit - ANI

தனது வெற்றி குறித்து பேசிய ஆஞ்சல் கங்வால், `கடந்த 2013-ம் ஆண்டில் நான் 12-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் கடுமையான மழை பெய்தது. அதனால், ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பேரழிவு நிகழ்ந்தது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்களை, விமானப்படை வீரர்கள் தங்கள் உயிரையும் துச்சம் என்று கருதி, ஆபத்தில் இருந்தவர்களை மீட்டெடுத்தனர். விமானப் படை வீரகள் மக்களைக் காப்பாற்ற போராடும் காட்சிகளை தொலைக்காட்சியின் மூலம் கண்டேன். அந்த நொடியில், விமானப் படையில் சேர்ந்து, நாட்டிற்காகச் சேவை புரிய வேண்டும் எனத் தீர்மானித்தேன். எனது விருப்பத்தைக் குடும்பத்தினரிடம் சொல்லி அதற்கான சம்மதமும் பெற்றேன்' என்றார். 

விமானப் படை

Photo Credit - ANI

மகளின் வெற்றி குறித்து பேசிய சுரேஷ் கங்வால், `விமானப் படைப்பிரிவில் அஞ்சல் தேர்வு செய்யப்பட்ட செய்தியை அறிந்து, எங்கள் பகுதி மக்கள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்தும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் நடத்திவரும் 'நாம்தேவ் தேநீர்க் கடை' பற்றியும் அறிந்திருக்கிறார்கள். வங்கியில் கடன் பெற்று அஞ்சலை படிக்க வைத்தேன். மகள்மேல் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை' என்றார்.