வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (24/06/2018)

கடைசி தொடர்பு:17:40 (24/06/2018)

`கிரிக்கெட் உலகின் சொத்து!’- ஆப்கன் வீரர் ரஷீத் கானைப் பாராட்டிய பிரதமர் மோடி

யோகாவின் மூலம் எல்லைகளை கடந்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மோடி

`மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக அகில இந்திய வானொலியின் மூலம், நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பேசிவரும் அவர், இன்று மன் கி பாத் மூலம் மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், `பணி நேரத்தின் போது விமானப்படை, கடற்படை, ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் யோகா செய்தததை எண்ணி நாடு பெருமை கொள்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் சாதி, மதம், பாலினம், நிறம், பிராந்தியம் என அனைத்தையும் கடந்து யோகாவை ஒரு கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர். இதன்மூலம் யோகா மக்களை ஒன்றிணைத்துள்ளதை அறிய முடிகிறது.

மோடி

பெங்களுருவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கன் அணி இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி நமக்கு பெருமை அளிக்கிறது. ஆப்கன் அணியை சேர்ந்த ரஷித் கான் கிரிக்கெட் உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்டியின் முடிவில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள், ஆப்கன் வீரர்களையும் அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டது ஒற்றுமையை பறைசாற்றியுள்ளது' இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.