வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (25/06/2018)

கடைசி தொடர்பு:16:45 (25/06/2018)

வெள்ளக்காடாக மாறியது மும்பை... தொடர் மழையால் தவிக்கும் மக்கள்

மும்பையில் தொடர்ந்து இரண்டாவது நாளாகக் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை

Photo Credits : ANI

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து ஒரு வார காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை தொடங்கிய மழை விடாமல் பெய்ததால் தற்போது மும்பை மாநகரே  வெள்ளக்காடாக மாறியுள்ளது. வருடம்தோறும் வட மாநிலங்களில்  ஜூன் மாத பாதியில் பருவ மழை தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த  வருடம் முன்கூட்டியே மழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. 

Photo Credits : ANI

அதே போன்று ஜூன் மாத தொடக்கம் முதலே மகாராஷ்ட்ரா போன்ற  மாநிலங்களில் மழை பெய்யத் தொடங்கியது. நேற்று பெய்த மழையில் மும்பை நகர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையினால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்குள்ள கட்டுமானக் கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 கார்கள் சேதமடைந்துள்ளன. மேலும், மகாராஷ்ட்ராவில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.