வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (25/06/2018)

கடைசி தொடர்பு:21:03 (25/06/2018)

பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா ஐக்கிய ஜனதா தளம்?

ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ்குமார்

பீகார் மாநிலத்தில் பி.ஜே.பி. கூட்டணியை விட்டு நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) வெளியேறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் மெகா கூட்டணியை விட்டு விலகி பி.ஜே.பி-யுடன் இணைந்து, மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நிதிஷ் குமார், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே, பி.ஜே.பி-யுடன் முரண்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த மாநிலத்தில் மொத்தம் 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அடுத்தாண்டு மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை ஜே.டி.யு மற்றும் கூட்டணிக்கட்சிகளுடன் நடத்தத் தொடங்கியுள்ளது பி.ஜே.பி. 

அந்த வகையில் பீகார் மாநிலத்தில் எத்தனைத் தொகுதிகளில் எந்தெந்தக் கட்சிகள் போட்டியிடுவது என்பதில் பி.ஜே.பி-க்கும், ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் சிங், "பி.ஜே.பி. விரும்பினால் பீகாரில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடலாம். கூட்டணிக் கட்சிகளின் உதவி தேவையில்லை என்று பி.ஜே.பி. நினைத்தால் அந்தக் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடட்டும். அதை யாரும் தடுக்கப்போவதில்லை. எல்லாக் கட்சிகளுக்கும் தனியானதொரு முடிவு உண்டு. அவர்கள் முடிவெடுக்க விரும்பினால், எடுத்துக் கொள்ளட்டும். அதனால், ஜே.டி.யு-வுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஜே.டி.யு பொறுத்தவரை, கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளது. பீகார் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜே.டி.(யு)-க்கு சிறப்பான செல்வாக்கு உள்ளதால், எங்களால் தனித்துப் போட்டியிட முடியும். ஆனால், கூட்டணியில் முதல்வர் நிதிஷ்குமார் இல்லாமல் பி.ஜே.பி-யால் வெற்றிபெற முடியாது.

2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தற்போது நாட்டில் பிரச்னை அடிப்படையிலான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த பிரச்னை வேறு; அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. உள்ளிட்ட கட்சிகள் எதிர்கொள்ள இருக்கும் பிரச்னைகள் வேறு" என்றார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை, ஐக்கிய ஜனதா தளத்தின் கருத்தை ஏற்க பி.ஜே.பி. மறுத்து விட்டது.

ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ்குமார் - பிரதமர் மோடிஐக்கிய ஜனதா தளத்திற்கும், பி.ஜே.பி-க்கும் இடையே சமீபகாலமாகவே கருத்துவேறுபாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 2015-ஆம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மெகாகூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிதிஷ்குமார் தலைமையிலான ஜே.டி.யு 243 தொகுதிகளில் 71 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அப்போது பி.ஜே.பி. 53 தொகுதிகளைக் கைப்பற்றியது. தற்போது மெகா கூட்டணியில் இருந்து வெளியேறி, பி.ஜே.பி ஆதரவுடன், நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்று, அங்கு ஆட்சியில் உள்ளார்.

சட்டசபைத் தொகுதிகளின் அடிப்படையில், அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இருக்க வேண்டும் என்பதே நிதிஷ் குமாரின் விருப்பம். ஆனால், பி.ஜே.பி-யோ 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற தொகுதிகளின் அடிப்படையில் வரவிருக்கும் தேர்தலில் தொகுதிப்பங்கீடு இருக்க வேண்டும் என்று ஜே.டி.யு வலியுறுத்துகிறது. 2014-ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பி.ஜே.பி. 22 தொகுதிகளைக் கைப்பற்றியது. பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி 6 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 3 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஜே.டி.யு வெறும் 2 மக்களவைத் தொகுதிகளில்தான் வெற்றிபெற்றது. எனவே, 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்தான் அரசியல்கட்சிகளின் உண்மையான செல்வாக்கைக் காட்டும் வகையில் உள்ளதாக பி.ஜே.பி. மூத்த தலைவர் ஒருவர் கூறினார். அந்த அடிப்படையிலேயே அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், பி.ஜே.பி-யின் இந்தக் கருத்தை ஏற்க ஜே.டி.யு மறுத்துள்ளது.

இந்தப் பிரச்னையால் பீகாரில் கூட்டணி ஆட்சியில் விரிசல் உருவாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பி.ஜே.பி. கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் வெளியேறி விட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனா, பி.ஜே.பி-யை விட்டு வெளியேறும் மனநிலையில் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெஹபூபா முஃப்தி தலைமையிலான பி.டி.பி-க்கு அளித்து வந்த ஆதரவை பி.ஜே.பி. விலக்கிக் கொண்டதால், அங்கு ஆட்சி கவிழ்ந்தது. தற்போது பீகாரிலும் மூன்று ஆண்டுகளில் ஆட்சி கவிழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், நிதிஷ்குமார் தலைமையிலான ஜே.டி.யு, பி.ஜே.பி. கூட்டணியை விட்டு வெளியேறி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்