வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (25/06/2018)

கடைசி தொடர்பு:09:07 (26/06/2018)

`விரைவில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!’ - எதிர்க்கும் யுக்திகளை வகுக்கிறது கர்நாடகா

காவிரி மேலாண்மை ஆணயத்தின் முதல் கூட்டம் அடுத்த வாரம் கூடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி மேலாண்மை கூட்டம்


நீண்ட இழுபறிக்குப் பின்னர், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழுவை மத்திய அரசு அமைத்தது. காவிரி விவகாரத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவுக்கான உறுப்பினர்களைப் பரிந்துரைக்க மத்தியஅரசு கோரியும் அனுப்பவில்லை. இதன் காரணமாகக் கர்நாடக மாநிலத்தின் சார்பில் தற்காலிக உறுப்பினரை மத்திய அரசே தாமாக முன்வந்து நியமித்தது. தங்களைக் கேட்காமல் பிரதிநிதியை நியமித்ததாக கர்நாடகா குற்றம்சாட்டிய நிலையில், இன்று பிரதிநிதிகளின் பெயரைக் கர்நாடக அரசு அறிவித்தது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் அடுத்த வாரம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அழைப்பிதழ் நாளை அல்லது நாளை மறுநாள் நான்கு மாநில அரசுகளுக்கும் அனுப்பப்படும் எனத் தெரிகிறது.

 

இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய கர்நாடக அரசு தரப்பில்
3 நாள்களில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் கர்நாடக எம்.பி-க்களும் பங்கேற்க உள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் காவிரி விவாகரத்துக்கு எதிர்ப்பைக் கிளப்ப அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.