'பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள்!' - இந்தியாவைச் சுட்டிக் காட்டிய ஆய்வறிக்கை

பெண்களுக்கு ஆபத்து உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் அளித்துள்ளது ஆய்வறிக்கை ஒன்று. 'பாலியல் வன்கொடுமை, பெண்களைப் பாலியல்ரீதியாக அடிமைப்படுத்துவது போன்றவை இந்தியாவில் அதிகம்' எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 

இந்திய பெண்

லண்டனில் செயல்பட்டு வரும் தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, பெண்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தாம்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், ` இந்தியாவில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அதேபோல், உள்நாட்டுப் பணிக்காக மனிதர்களைக் கடத்துவது, கட்டாயத் திருமணம் மற்றும் பாலியல் அடிமைத்தனம் போன்ற செயல்களும் அதிகளவில் நிகழ்கின்றன' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 

மேலும், ஆசிட் வீச்சு, பெண் பிறப்பு உறுப்புச் சிதைவு, குழந்தைத் திருமணம் மற்றும் உடல்ரீதியான அத்துமீறல் ஆகியவற்றை மேற்கோள்காட்டி, 'பெண்களுக்கு இது மிகவும் ஆபத்தான நாடு' எனத் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கையில் இடம்பிடித்துள்ள பத்து நாடுகளில் ஒன்பது நாடுகள் ஆசியக் கண்டத்தில் வருகின்றன. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்தில் சிரியாவும் உள்ளன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை. பெண்களுக்கு ஆபத்தான மேற்கத்திய நாடுகள் பட்டியலில், அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ராய்ட்டர் பவுண்டேஷன் வெளியிட்ட ஆய்வறிக்கையில் முதல் நான்கு இடத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பிடித்திருந்தன. 

லண்டன் ஆய்வறிக்கை குறித்துப் பேசும் சமூக ஆர்வலர்கள், 'பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் பெண்கள் கடுமையாகப் போராடிவருகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்குமுன் டெல்லி பேருந்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்குப்பிறகு, நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது. 2007-ல் முதல் 2016-ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பெண்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகள் 83 சதவிகிதம் உயர்ந்ததாக அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு நான்கு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன' என வேதனைப்படுகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!