வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (26/06/2018)

கடைசி தொடர்பு:16:43 (26/06/2018)

`பயிர்க் கடன் வேண்டுமா, நான் சொல்வதைச் செய்..’ விவசாயி மனைவியை அதிரவைத்த வங்கி மேலாளர்

பயிர்க் கடன் கேட்டு வந்த விவசாயியின் மனைவியிடம் தவறாகப் பேசிய வங்கி மேலாளரைக் காவல்துறை கைது செய்துள்ளது. 

விவசாயியின் மனைவி
 

விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஆனால், அவை அனைத்தும் விவசாயிகளைச் சென்றடைகிறதா என்பதுதான் கேள்வி. பயிர்க் கடன், பயிர் காப்பீட்டுத் திட்டம் என எதுவாக இருந்தாலும் நிறைய நடைமுறைகளைத் தாண்டிதான் அவர்களைச் சென்றடையும். பயிர்க்கடனுக்காக வங்கிகளுக்கு நடையாய் நடக்கும் விவசாயிகளிடம் சில வங்கி அதிகாரிகள் லஞ்சம் கேட்பது வாடிக்கையாகிவிட்டது. நாக்பூரில் வங்கி மேலாளர் ஒருவர் ஒருபடி மேலே சென்று பயிர்க் கடன் கேட்டுவந்த விவசாயியின் மனைவிக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டிருக்கிறார்.

நாக்பூரில் தட்டாலா என்னும் பகுதியில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளை இயங்கி வருகிறது. அதில் ராஜேஷ் ஹிவ்சே என்பவர் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். அவரிடம் விவசாயி ஒருவர் பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பப்படிவத்தைச் சமர்ப்பித்துள்ளார்.  `வங்கிக்கடன் பெற ஒருசில சந்தேகங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். உன் அலைபேசி எண்ணையும் உன் மனைவியின் அலைபேசி எண்ணையும் கொடு’ என்று விவசாயிடம் ராஜேஷ் கேட்டுள்ளார். விவசாயியும் எண்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

விவசாயியின் மனைவிக்கு மறுநாள் ராஜேஷிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. `உன் கணவர் சமர்ப்பித்துள்ள பயிர்க் கடன் படிவம் கையெழுத்தாக வேண்டுமெனில், நீ என் ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்’ என்று தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். அந்தப் பெண் ஒப்புக்கொள்ளவில்லை என்றதும் வங்கியில் உதவியாளராகப் பணிபுரியும் அதே ஊரைச் சேர்ந்த மனோஜ் என்பவரை தூதனுப்பியிருக்கிறார். `மேனேஜர் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு பயிர்க் கடன் கண்டிப்பாகக் கிடைக்கும்’ என்று விவசாயி மனைவியிடம் மனோஜ் கேட்டிருக்கிறார். அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றதும் ராஜேஷ் அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து போன் செய்து தொந்தரவளித்திருக்கிறார். ஒருகட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத அந்தப் பெண், வங்கி மேலாளரான ராஜேஷ் போனில் பேசியதை ரெகார்ட் செய்து போலீஸில் புகார் கொடுத்துவிட்டார். ராஜேஷையும் மனோஜையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்கள்மீது பெண்கள் வன்கொடுமை, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் கிராம மக்களுக்குத் தெரிய வர, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையை அடித்து நொறுக்கியுள்ளனர்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க