வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (26/06/2018)

கடைசி தொடர்பு:18:40 (26/06/2018)

`இனி ஆப் மூலம் பாஸ்போர்ட் பெறலாம்!’ - புதிய திட்டத்தை அறிவித்த சுஷ்மா

இனி நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தும் பாஸ்போர்ட்டைப் பெற விண்ணப்பிக்க முடியும். இதற்காக, `பாஸ்போர்ட் சேவா ஆப்' என்ற மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 

பாஸ்போர்ட்

நாட்டில் உள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்களில் நாள்தோறும் நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றனர். இணையதளம் வழியாக விண்ணப்பிப்பவர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு அவ்வளவு எளிதாக பாஸ்போர்ட்டுகள் கிடைப்பதில்லை. ஆவணங்களை சரிபார்ப்பு உட்பட பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகே பெற முடிகிறது. பாஸ்போர்ட் சேவை மையங்கள் இல்லாத மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், பக்கத்து மாநிலங்களுக்குச் செல்லும் சூழலும் நிலவுகிறது. இத்தகைய இடர்ப்பாடுகளைக் களைவதற்காக `பாஸ்போர்ட் சேவா' ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், `இனி நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட் சேவா ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆப்பில் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு வந்து, போலீஸார் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். அதன் பிறகு, பாஸ்போர்ட் வழங்கப்படும். இது ஒரு பாஸ்போர்ட் புரட்சி என அழைக்கலாம்' என்றார்.