இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்ட அருண் ஜெட்லி...என்ன சொல்கிறார் மோடி? #Emergency #CongressKilledDemocracy

“இந்திரா காந்தியும்  , ஹிட்லரும் அரசியலமைப்பை ஒருபோதும் ரத்து செய்ததில்லை . அவர்கள் குடியரசு அரசியலமைப்பைப் பயன்படுத்தி , ஜனநாயகத்தைச் சர்வாதிகாரமாக  மாற்றினர்.” - அருண் ஜெட்லி!

இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்ட அருண் ஜெட்லி...என்ன சொல்கிறார் மோடி? #Emergency #CongressKilledDemocracy

``இந்திரா காந்தியும், ஹிட்லரும் அரசியலமைப்பை ஒருபோதும் ரத்து செய்ததில்லை. அவர்கள் குடியரசு அரசியலமைப்பைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தைச் சர்வாதிகாரமாக மாற்றினர். ஹிட்லர் தன் பெரும்பாலான எதிர்க்கட்சியினரைக் கைதுசெய்து, பாராளுமன்றத்தில் சிறுபான்மையாக இருந்த தன் அரசை 2/3 பெரும்பான்மை அரசாக மாற்றிக் காட்டினார். ஆனால், ஹிட்லரைப் போல் இல்லாமல், இந்திரா காந்தி இந்தியாவைப் `பரம்பரை ஜனநாயகமாக' மாற்றினார்”, என்று தன் ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, 1975ம் ஆண்டு நடந்த அவசரக்கால பிரகடனப்படுத்திய நேற்று (ஜூன் 25), பதிவிட்டிருந்தார்.

அருண் ஜெட்லி

இதைத் தொடர்ந்து, இந்தக் கருத்துக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் சமூகவலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. #Emergency,  #CongressKilledDemocracy, #IndiraGandhitoHitler போன்ற ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகிக்கொண்டிருக்கின்றன.

மோடிஇதற்கிடையே, அருண் ஜெட்லி தன் வலைப்பக்கத்தில், 1975ம் நடந்த அவசரக்கால பிரகடனம் குறித்து மூன்று தொடர் கட்டுரைகள் வெளியிட்டார். அதை, பிரதமர்  நரேந்திர மோடி, தன் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில், பகிரந்துகொண்டு, ``அவசரக்கால பிரகடனத்தின் இருண்ட நாள்களைப் பற்றியும், இந்தக் காலகட்டத்தில் தனிமனித உரிமைகளை நசுக்கி, எப்படி நம் அரசியலமைப்புக் கொள்கைகளை அவசரக்கால பிரகடனம் நேரடித் தாக்குதலை நடத்தியது என்பது பற்றியும் ஸ்ரீ அருண் ஜெட்லி எழுதியிருக்கிறார். அவரின் பதிவுகளை படிக்கவும்”, என்று ட்வீட் செய்திருக்கிறார். இதன்மூலம், அருண் ஜெட்லி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பற்றி கூறிய கருத்துகளுக்கு மோடி ஆதரவு தெரிவிக்கிறார் என்றும் தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

மேலும், பா.ஜ.கவின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில், ``காங்கிரஸ் இந்திய வரலாற்றில் ஏற்படுத்திய இருண்ட நாள்களின் அத்தியாயம்!”,  என்ற தலைப்பில், வீடியோ  ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், அவசரக்கால பிரகடனம், பொதுமக்கள்மீது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது,  பத்திரிகைகளின் சுதந்திரம் எவ்வாறு முடக்கப்பட்டது, அரசியலமைப்பை இந்திரா காந்தியும் காங்கிரஸ் கட்சியும் எவ்வாறு கையாண்டனர் என்றும், அதைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதும் வெளியிட்டிருந்தனர்.

அருண்

இதுகுறித்து வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தன் ட்விட்டர் பக்கத்தில், ``இன்றைய சூழ்நிலையில் குடியரசு இந்தியாவுக்கு தேவை, பெண் பிரதமரான இந்திரா காந்தியை போல ஓர் ஆண் தலைவர் அல்ல. காங்கிரஸற்ற ஒரு முகமும் அல்ல. ஆணோ, பெண்ணோ, நாடு முழுவதும் ஏற்றுகொள்ளக் கூடிய மறைந்த ஜெயப்ரகாஷ் நாராயண் போல துணிச்சலும், கறைபடியாத குணமும் கொண்ட ஓர் ஆளுமை மட்டுமே!” என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால், சமூகவலைதளங்களில் சிலர், பா.ஜ.கவினர் இந்தச் சம்பவத்தை மையப்படுத்து, காங்கிரஸை மீண்டும் மீண்டும் தாக்குகின்றனர் என்றும், அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் பதிவிட்டுவருகின்றனர். 

ஒரு ட்விட்டர் பதிவில்,

``பிஜேபி பாபர் மசூதியை இடித்தது/அது பம்பாய் கலவரத்தில் கொண்டுபோய் நிறுத்தியது;
பிஜேபி குஜராத் கலவரத்தை ஏற்படுத்தியது;
பிஜேபி மாட்டு அரசியல் என்ற பெயரில், விலங்குகளுக்காக மனிதர்களைக் கொன்று குவித்தது;
பிஜேபி ஊடகங்களை ஒட்டுமொத்தமாக வாங்கியது;
பிஜேபி தேசப்பற்றையும் உச்சப்பட்ச தேசபக்தியையும் விற்றது;
பிஜேபி தேர்தல் ஆணையத்தையும், சி.பி.ஐயையும் கட்டுப்படுத்துகிறது /நீதிபதிகளைக் கொல்கிறது
ஆனால், காங்கிரஸ் ஜனநாயகத்தைக் கொன்றதாம்!”, என்று சுபி என்பவர் கடுமையாகக் குற்றம்சாட்டியிருந்தார்.  

அரசியல் கட்சிகள், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதும், விமர்சிப்பதும் காலங்காலமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த அரதப் பழசான வழக்கத்தை விட்டு, மக்களின் நலனில் கவனம் செலுத்தினால், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!