`பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்!' - மனம் திறந்த விஜய் மல்லையா

இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் பெற்றக் கடனை திருப்பிச் செலுத்த முயற்சி எடுத்து வருவதாகத் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்திருக்கிறார். 

விஜய் மல்லையா

பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரான விஜய் மல்லையா, நிதி நெருக்கடியில் சிக்கி தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மீட்டெடுப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்பட பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ஒன்பது ஆயிரம் கோடி அளவில் கடன் பெற்றார். இந்தக் கடனை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2015-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

இதற்கிடையில், விஜய் மல்லையா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, அவரது சொத்துகளை முடக்கினர். லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர சட்ட ரீதியாகப் பல நடவடிக்கைகளை சி.பி.ஐ மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச் செல்பவர்களின் சொத்துகளை முடக்கம் செய்யும் சட்டத்தின் கீழ், விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான 13,900 கோடி சொத்துகள் அண்மையில் முடக்கப்பட்டன.

விஜய் மல்லையா

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக வங்கிகளிடம் பெற்ற கடன் குறித்து, பேசாமல் இருந்த விஜய் மல்லையா, தற்போது மனம் திறந்திருக்கிறார். `கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மீட்டெடுப்பதற்காகப் பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்றேன். கடனை திருப்பிச் செலுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன். கடந்த 2016-ம் ஆண்டில் கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதியமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தேன்' எனக் கூறி பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறார் விஜய் மல்லையா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!