குழந்தை கடத்த வந்ததாகச் சந்தேகம்! - பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்

அகமதாபாத்தில் குழந்தை கடத்த வந்தவர்கள் என நினைத்து பிச்சைகாரர்களை தாக்கியுள்ளது ஒரு கும்பல். இதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

சமூக வலைதளம்

சென்ற வருடத்தில் குழந்தைக் கடத்தல் அதிகமாக நடைபெற்றுவந்தது.  இதனால், சமூக ஊடகங்களில் எச்சரிக்கை என்ற பெயரில் சில செய்திகள் உலாவந்துகொண்டிருக்கின்றன. அதை உண்மை என நினைத்து, பொது இடங்களில் இயல்பாக ஒருவர் குழந்தைகளின் அருகில் சென்றால்கூட,  குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து, ஒரு கூட்டமே அவரைத்  தாக்குவதும், அதில் சிலர் உயிரிழப்பதும் சில மாதங்களாக நடந்துவருகிறது. 

இதேபோன்ற சம்பவம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ந்துள்ளது.  அகமதாபாத்தில் சில தினங்களாகவே குழந்தைக் கடத்தல் நடந்துவருவதாகவும், இதற்காக ஒரு பெண்கள் கூட்டமே அங்கு  வந்துள்ளதாகவும், இதனால் அனை

வரும் எச்சரிக்கையாக இருக்கும்படி  ஒரு செய்தி சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் போன்றவற்றில் பரவலாக ஷேர் செய்யப்பட்டுவந்துள்ளது. இந்தச் சூழலில்,  ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து நான்கு பெண்கள் பிச்சை எடுப்பதற்காக  அகமதாபாத் வந்து, அங்குள்ள குடிசைப் பகுதிகளில் தங்கியுள்ளனர். 

அந்தப் பெண்கள் நகருக்குள் வந்தபோது, அவர்கள்தான் குழந்தைகளைத் திருடும் பெண்கள் என நினைத்து ஒரு கும்பல், அந்த நான்கு பெண்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், அந்தக் கும்பலிடமிருந்து நான்கு பெண்களையும் மீட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில், சாந்திபன் மார்வாடி என்ற 40 வயது பெண் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். மேலும், மூன்று பெண்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் உலாவரும் செய்திகளை அப்படியே  நம்ப வேண்டாம் எனவும், குறிப்பாக குழந்தைக் கடத்தல் தொடர்பான  செய்திகள் வந்தால், அதை முதலில் உறுதிசெய்ய வேண்டும் எனவும்,  அகமதாபாத் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.  மேலும், இதுபோன்ற செய்திகள் தங்களுக்கு வந்தால், அதை வேறு யாருக்கும் பகிர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வந்த செய்திகளின்மூலம் குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என நினைத்து அடித்த சம்பவம்,  தமிழ்நாடு, அசாம், ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!