வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (27/06/2018)

கடைசி தொடர்பு:14:27 (04/07/2018)

இந்தியாவில் அதிகரிக்கும் பள்ளி ராகிங்... தடுப்பது எப்படி? #VikatanInfographics

இந்தியா முழுவதும் 2015 ஜனவரி முதல் 2018 மார்ச் வரை 2,041 ராகிங் சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் அதிகபட்சமாக 3 மாநிலங்களில் 100 ராகிங் வழக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் அதிகரிக்கும் பள்ளி ராகிங்... தடுப்பது எப்படி? #VikatanInfographics

ரையில் நீச்சல் அடிப்பது, ஒற்றைக்காலிலேயே மைதானத்தைச் சுற்றுவது என்று சினிமாக்களில் வருவதைப் போல ராகிங் இருந்துவிடுவதில்லை. ராகிங் கொடுமைகள் முன்பெல்லாம் கல்லூரிகளில் அதிகம் இருந்து வந்தன. ஆனால், இப்போது பள்ளிகளிலேயே அதிகரித்துள்ளது. ராகிங் கொடுமையால் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பெரும்பாலும் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பல்வேறு வருடங்களாகவே இருக்கிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்கச் சட்டத்தில் பல்வேறு வழிகள் இருந்தும் அதைச் சரியாக  நடைமுறைப்படுத்துவதில்லை. இந்தக் கொடுமையின் உச்சகட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

கடந்த 1970-ம் ஆண்டில்தான் ராகிங் கொடுமைகள் பற்றி உலகுக்குத் தெரியவந்தது. இந்தக் கொடுமையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ராகிங் வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் தண்டனையிலிருந்து தப்பி விடுகின்றனர். மேலும், குற்றவாளிகளுக்குக் குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்படுகின்றன. 

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் அதிகளவு ராகிங் நடைபெற்று வந்ததால் 1997-ம் ஆண்டு முதன்முதலாக தமிழ்நாடு ராகிங் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலமாக ராகிங் செய்பவர்களுக்கு ஆறு மாதத்திலிருந்து 2 வருடம் வரை சிறைத்தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இருந்தும் வருடம்தோறும் தமிழகத்தில் மட்டும் 20லிருந்து 50 ராகிங் வழக்குகள் பதிவாகி வருகின்றன.

பள்ளிக் குழந்தைகள் மீதான வன்முறை

இந்தியா முழுவதும் 2015 ஜனவரி முதல் 2018 மார்ச் வரை 2,041 ராகிங் சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் அதிகபட்சமாக 3 மாநிலங்களில் 100 ராகிங் வழக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 143 ராகிங் வழக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 100 ராகிங் வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 99 ராகிங் வழக்குகளும் பதிவாகியுள்ளன. 

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு சக மாணவ, மாணவிகளால் கிண்டல் செய்யப்பட்டதால் 10-ம் வகுப்பு மாணவி கார்த்திகா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

2014-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் ராகிங் கொடுமை தாங்காமல் 12-ம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

2018 பிப்ரவரி மாதம் திருச்சியில் சக மாணவர்களின் ராகிங் கொடுமை காரணமாக 10வகுப்பு மாணவர் ரஞ்சித் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு சக மாணவர்கள் இருவர் ஹால் டிக்கெட்டைக் கிழித்து ரேகிங் செய்ததால், ப்ளஸ் 2 மாணவி தமிழரசி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பீகாரில் 2014-ம் ஆண்டு ஜெய்குமார் சிங் என்ற அமைச்சரின் மகன் ஆதர்ஷ்குமார் சிங் ராகிங் காரணமாக விஷம் குடித்துத்  தற்கொலைக்கு முயன்றார். 

கொல்கத்தாவில் சீனியர் மாணவி செய்த ராகிங் கொடுமையால் 5-ம் வகுப்பு மாணவி பலியானார். 

இது போன்ற நிகழ்வுகள் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 109 ராகிங் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் 2016-ம் ஆண்டை விட 2017-ல் அதிகளவு ராகிங் வழக்குகள் பதிவாகியுள்ளதாக லோக் சபா கூறியுள்ளது. முதலில் ஜாலியான சீண்டல்களாக ஆரம்பிக்கும் ராகிங், எல்லை மீறும்போதுதான் கொடுமையாக மாறுகிறது. இது போன்று பொது இடங்களில் நடத்தப்பட்ட ராகிங்கினால் பலரின் மனநிலை அதிகளவு பாதிப்படைகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி அதில் பெரும்பாலும் சிலரைச் சிக்க வைத்து விடுகின்றனர்.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் மற்றவரை அடக்கி ஆளத்தான் ஆசைப்படுகிறார்கள். ராகிங் கொடுமையின்போது எதிர்வினையாகச் சண்டை போடவோ, அடிதடியிலோ இறங்க வேண்டாம். பெரும்பாலும் ராகிங்கில் ஈடுபடுபவர்கள், உங்களின் பலம் எப்படியிருக்கிறது என்பதைப் பரிசோதிப்பதற்காகத் தங்களின் அதிகாரத்தைச் செலுத்துவார்கள். ஆனால், பயந்த நிலையில் அதனை எதிர்கொண்டாலோ அல்லது எதிர்ப்பைக் காட்டுபவர்களாகவோ இருந்தால், மேலும் மேலும் அதிகளவில் சீண்டிக்கொண்டே இருப்பார்கள்.  இதைத் தாங்கிக்கொள்ளாதப் பல்வேறு மாணவ மாணவிகள், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

ராகிங் தொடர்பாகப் பெற்றோர்களிடம் அல்லது சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் உடனடியாகப் புகார் தெரிவிக்க வேண்டும். உள்ளுக்குள் வைத்துப் புழுங்குவதால் ஏற்படும் மனஉளைச்சல் தற்கொலை மற்றும் ஆபத்தான முடிவுகளைத் தேடவே வழிவகுக்கும். எல்லை மீறும் போது காவல்துறையில் புகார் தெரிவிக்கவேண்டியது அவசியம்.

ராகிங்

இந்தியாவில் ராகிங்கினால் மன உளைச்சல் ஏற்பட்டு 2007-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டுக்குள் 71 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதேபோல் 30-க்கும் அதிகமானோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் மூன்றில் ஒரு குழந்தை, பள்ளியில் இதுபோன்ற கொடுமைக்கு உள்ளாகிறது என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ராகிங் என்று வரையறுக்கப்படுவது என்னவென்றால், தேவையில்லாமல் சத்தம் ஏற்படுத்தித் தொந்தரவு செய்வது, பயம் மற்றும் தர்மச்சங்கடமான நிலையை ஏற்படுத்துவது, உடல் மற்றும் உளவியல் ரீதியாகக் காயங்களை ஏற்படுத்துவது, செய்யக் கூடாத செயல்களைச் செய்யச் சொல்வது ஆகியவை.

இது போன்ற செயலைச் செய்தால் தமிழ்நாடு ராகிங் தடுப்புச் சட்டம் 1997,பிரிவு 4-ன் படி கிரிமினல் குற்றமாகப் பதிவு செய்யப்படும். பிரிவு 6-ன்படி ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர் நிர்வாகத்திடம் புகார் அளித்தால், குற்றம் செய்த மாணவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். புகார் அளித்த பின்பும் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், அந்தத் தகவல் காவல் துறைக்கு வந்தால், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் மீது பிரிவு 4-ன்படி தண்டனை வழங்கப்படும். 

ராகிங் தொடர்பாக யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். அது பாதிப்படைந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. ராகிங் தொடர்பாகப் புகார் அளிக்க, தமிழ்நாடு போலீஸின் இணையதளத்தில் (www.tnpolice.gov.in), கேலி செய்தல் மற்றும் பெண்களைக் கேலி செய்தல் பற்றிய புகார்களைத் தெரிவிக்கலாம். அல்லது 1800-180-5522 என்ற இலவச எண்ணில் தொடர்புகொள்ளலாம். www.antiragging.in என்ற இணைய தளத்திலும் புகார்களைத் தெரிவிக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்