வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (27/06/2018)

கடைசி தொடர்பு:18:21 (27/06/2018)

வர்த்தக யுத்தம் பற்றிய கவலையினால் சந்தையில் மீண்டும் சரிவு  27-06-2018

தொடக்கத்தில் சில நிமிடங்கள் மட்டுமே பாசிட்டிவ் திசையில் இருந்த இந்தியப் பங்குச் சந்தை, இன்று நேரம் செல்ல செல்ல வலுவிழந்து இறுதியில் மிகவும் மந்தமான நிலையில் முடிவுற்றது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 272.93 புள்ளிகள் அதாவது 0.77 ச தவிகிதம் சரிந்து 35,217.11 என முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 97.75 புள்ளிகள் அதாவது 0.91 சதவிகிதம் சரிந்து 10,671.40-ல் முடிவுற்றது.

சந்தையின் இன்றைய சரிவுக்கு முக்கியக் காரணங்கள் :

அதிகரித்து வரும் வர்த்தக யுத்தம் பற்றிய கவலை காரணமாக ஆசியச் சந்தைகள் பெரும்பாலும் நஷ்டத்தில் முடிந்தன. இது இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது.

வர்த்தகப் பூசல் பற்றிய கவலை மற்றும் சில ஏமாற்றமளிக்கும் பொருளாதார அறிக்கைகள் காரணமாக ஐரோப்பியச் சந்தைகளும் இறங்குமுகமாகவே இருக்கின்றன.

இரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என்று அனைத்து நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டிருப்பதாலும், லிபியாவிலிருந்து ஏற்றுமதியாகக் கூடிய கச்சா எண்ணெய் அளவு குறைய வாய்ப்பிருப்பதால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பது இந்தியப் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதால் சந்தையில் அது முதலீட்டாளர்கள் மனநிலையை இறுக்கமாக ஆக்கியிருக்கிறது.

மேலும், டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 19 மாதத்தில் இல்லாத அளவுக்கு 68.67 எனச் சரிந்திருப்பதும் சந்தையின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

ஆயில், பவர், வங்கி, ரியல் எஸ்டேட், கேப்பிடல் கூட்ஸ், மெட்டல், ஆட்டோமொபைல் மற்றும் டெலிகாம் துறை பங்குகள் பெரும்பாலும் சரிவைக் கண்டன.

விலை சரிந்த பங்குகள் :

பாரத் பெட்ரோலியம் 8.3%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 7.8%
இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் 6.8%
கெயில் இந்தியா 4.6%
யு.பி.எல். 3.4%
லார்சென் & டூப்ரோ 3%
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 2.9%
ஜீ டெலி 2.9%
எய்ச்சேர் மோட்டார்ஸ் 2.6%
ஹின்டால்கோ 2.5%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2.3%
டாடா மோட்டார்ஸ் 2.2%

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

டெக் மஹிந்திரா 4.1%
பார்தி இன்ஃப்ராடெல் 2.4%
எச்.சி.எல். டெக்னாலஜிஸ் 1.3%
எச்.டி.எஃப்.சி 1%
சிப்லா 1% 

இன்று மும்பைப் பங்குச் சந்தையில் 2190 பங்குகள் சரிவைக் கண்டன. 490 பங்குகள் லாபத்துடனும், 115  பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.