வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (28/06/2018)

கடைசி தொடர்பு:13:33 (28/06/2018)

ஜி.எஸ்.டி-க்கு ஒரு வயது! - கற்றவை பெற்றவை என்ன?

`ஒரே நாடு ஒரே வரி' என்ற கொள்கையின் அடிப்படையில், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த வரி விதிப்பு முறையினால் ஏற்பட்ட குழப்பங்களும் பாதிப்புகளும் இன்னமும் நீடிக்கிறபோதிலும், விரைவிலேயே இவை முடிவுக்கு வந்து அதற்கான பலன் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும் என அரசுத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி-க்கு ஒரு வயது! - கற்றவை பெற்றவை என்ன?

`ஒரே நாடு ஒரே வரி' என்ற கொள்கையின் அடிப்படையில், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த வரி விதிப்பு முறையினால் ஏற்பட்ட குழப்பங்களும் பாதிப்புகளும் இன்னமும் நீடிக்கிறபோதிலும், விரைவிலேயே இவை முடிவுக்கு வந்து அதற்கான பலன் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும் என அரசுத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி

கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் புதிய வரி விதிப்பு முறையைத் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் அப்போது அமலில் இருந்த 12-க்கும் அதிகமான வரி விதிப்பு முறைகள் முடிவுக்கு வந்தன.

இதனையடுத்து 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலானது. 2016-ம் ஆண்டு நவம்பரில் அமலான பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகளிலிருந்து அப்போதுதான் தொழில்முனைவோர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் சற்று மீண்டு வந்த நிலையில், இந்தப் புதிய வரி விதிப்பு முறை அவர்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த வரி விதிப்பு முறைக்கான வரவேற்பும் பாதியளவு இருக்கத்தான் செய்தது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ``நிபுணர்கள் தயாரித்த அசல் ஜிஎஸ்டி இதுவல்ல. இந்தியப் பணவீக்கத்தில் புதிய வரி முறை, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று எச்சரித்தார்.

இந்த நிலையில் புதிய வரி விதிப்பு முறை பல தரப்பினரிடையே, குறிப்பாகச் சிறு வணிகர்கள் மற்றும் கணினி பயன்பாடு அறியாத வணிகர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்திய நிலையில், பீடி, பட்டாசுகள், பிஸ்கெட், ஊறுகாய் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்கள், குடிசைத் தொழிலில் ஈடுபடுவோர், தங்கள் தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தனர். பொதுமக்கள் தரப்பிலோ உணவுப் பொருள்களுக்கு, குறிப்பாக உணவு விடுதிகளில் ஜிஎஸ்டி அமலுக்குப் பின்னர் விலை அதிகரித்து விட்டதாகப் புகார் கூறப்பட்டது.

ஆனால், ஆரம்பத்தில் சற்று சிரமங்கள் இருக்கும் என்றாலும், நீண்ட கால அடிப்படையில் இது பலனளிக்கும் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது.

சிக்கித் தவித்த சிறு தொழில் நிறுவனங்கள்

ஆனாலும் ஜிஎஸ்டி அமலான பிறகு பாதிக்கப்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள், இன்னமும் அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கின்றனர். ஜி.எஸ்.டி அமலான பிறகு கோவையில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவை மாவட்ட பம்ப் செட் உற்பத்தியாளர்கள் சங்கத் (கோப்மா) தலைவர் மணிராஜ், ``நாட்டில் 90 சதவிகித விவசாயம் மோட்டார் பம்ப் செட்களை நம்பித்தான் இருக்கிறது. ஆனால், ஆடம்பரப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துக்கு அத்தியாவசியத் தேவையாகத் திகழும் பம்ப் செட்கள்மீது விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோவையில் உதிரிபாகங்கள் தயாரிப்பதைப் பலரும் குடிசைத் தொழிலாகச் செய்து வருகின்றனர். முன்பு 50 பேர் பணி செய்த இடத்தில், ஜி.எஸ்.டி வரி விதிப்புக்குப் பின்னர் ஐந்து பேர்தான் பணி செய்கின்றனர். 70 சதவிகித வியாபாரம் போய்விட்டது. கோவையில் 70 ஆண்டுகளாக இந்தத் தொழில் செய்து வருகிறோம். இந்தத் தொழிலில் ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், ஒன்றரை லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாளுக்கு நாள் வேலைவாய்ப்புகள் குறைவதால், இப்போது வாரத்துக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளித்து வருகிறோம்" என்று விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினரோ, ``ஜி.எஸ்.டி-க்குப் பிறகு, அனைத்து வகையான மூலப்பொருள்களின் விலையும் 20 சதவிகிதம் வரை உயர்ந்துவிட்டது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்கும்போது, முன்பு 15 சதவிகிதம் மானியம் இருந்தது. இப்போது அதை நிறுத்திவிட்டார்கள். அதேபோல, பொதுத்துறை நிறுவனங்கள் எங்களுக்கு 20 சதவிகிதம் ஆர்டர் வழங்க வேண்டுமென்று சட்டம் இயற்றியிருந்தார்கள். ஆனால், அதை நடைமுறைப்படுத்த யாருமே முயற்சி செய்யவில்லை. இவற்றையெல்லாம் சரிசெய்தாலே எங்கள் தொழிலைக் காப்பாற்றலாம்" என்கின்றனர்.

ஏற்றுமதியாளர்களும் புகார்

வரித்தாக்கல் செய்வதிலும், செலுத்திய வரியைத் திரும்பப் பெறுவதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்படவில்லை. ஏற்றுமதியாளர்களுக்கான வரி வரவை (ஐஜிஎஸ்டி) திரும்ப அளிப்பதில் கால தாமதம் நிலவுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. வரியைத் திரும்பப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாகப் பணப்புழக்கம் பாதிக்கப்படுவதாக ஏற்றுமதியாளர்கள் தொடர்ச்சியாகப் புகார் அளித்த நிலையில், இந்தக் காலதாமதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தாலும் வரித்தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்குகளில் உள்ள குளறுபடிகளால்தாம் தாமதம் நிகழ்வதாக மத்திய நேரடி வரி ஆணையம் தரப்பில் கூறுகின்றனர்.

ஜிஎஸ்டிஆர் மற்றும் ஏற்றுமதிக்கான ரசீதுகளில் தரப்பட்ட தவறான விவரங்களினால் இன்னும் ரூ.16,000 கோடி நிலுவையில் உள்ளது. 32 சதவிகித ஜிஎஸ்டிஆர் 1 பதிவுகள் ஜிஎஸ்டிஎன்-லிருந்து சுங்க வரிக்கு மாற்றப்பட்டுள்ளன. தவிர 70 சதவிகித ஐஜிஎஸ்டி தாக்கல்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டதால் ஏற்றுமதியாளர்களின் வரியைத் திரும்ப அளிப்பதில் தாமதம் நிலவுவதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஏற்றுமதி வரியைத் திரும்பப் பெறுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் குறியீடு முறையினாலும் தாமதம் நிலவுகிறது. முன் மாதங்களுக்கான `டிஜிட்டல் குறியீடு' வழங்க முடியாது என அதிகாரிகள் மறுப்பதால், ஏற்றுமதி நிறுவனங்கள், தற்காலிகமாக ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற முடியாத நிலை உள்ளது. இப்படிப் பல வகையிலும் ஆணையத்தின் காலதாமதம் தங்களை அலைக்கழிப்பதாக உள்ளது என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்.

1 லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்

வாட் வரி விதிப்பு முறையில் மாதாந்திர ரிட்டன்கள் அனைத்தும் எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இருந்ததால் வர்த்தகர்களும், தொழில் துறையினரும் மிக எளிதில் மாதாந்திர ரிட்டன்களையும், வரிகளையும் தாக்கல் செய்து வந்தனர். ஆனால் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில், மூன்று விதமான ரிட்டன்கள் உள்ளதால் வர்த்தகர்களும், தொழில் துறையினரும் ரிட்டன்களையும் புரியாமல் தாக்கல் செய்து வந்ததால் தொடக்கத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் அதிரடியாக 95,000 கோடி ரூபாய் என்று உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்தது. கூடவே உள்ளீட்டு வரி வருவாயை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் குழப்பம் நிலவியதாலும், ஜிஎஸ்டி வரி வசூல் அதிகமாக இருந்தது. வர்த்தக நிறுவனங்களும், தொழில் துறையினரும், பின்னர் வந்த மாதங்களில் ஜிஎஸ்டி வரி முறைகளை ஓரளவு புரிந்து கொண்டு மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்து வந்ததால் ஜிஎஸ்டி வரி வசூல் சரியத் தொடங்கியது. கூடவே, மாநிலங்களுக்கு இடையே சரக்குப் பரிமாற்றத்துக்குத் தேவையான ஆவணங்கள் இல்லாததாலும், ஜிஎஸ்டி வரி வசூல் சரிவைச் சந்தித்தது. ஜிஎஸ்டி வரி வசூலானது ஆகஸ்ட் மாதத்தில் 92,609 கோடி ரூபாய் என மளமளவென சரியத் தொடங்கி படிப்படியாக நவம்பர் மாதத்தில் 80,808 கோடி ரூபாய் என்று பாதாளத்துக்குச் சென்றது.

அதன்பின்னர் ஏற்ற இறக்கத்துடன் நீடித்த ஜிஎஸ்டி வரி வசூல், ஏப்ரல் மாதத்திலிருந்து மத்திய அரசு அமல்படுத்திய இ-வே பில் என்னும் இணையவழி ரசீது முறையைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தின் ஜிஎஸ்டி வரி வசூல் 1,03,458 கோடி ரூபாயைத் தொட்டு சாதனை படைத்தது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ``ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய அரசின் வருவாயாக 18,652 கோடி ரூபாயும், மாநில அரசின் வருவாயாக 25,704 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த வரி வருவாயாக 50,548 கோடி ரூபாயும், இழப்பீட்டு வரியாக 8,554 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளது. ஏப்ரல் மாதத்தில் வர்த்தக நிறுவனங்களும் தொழில்துறையினரும் தாக்கல் செய்த ஜிஎஸ்டி ரிட்டன் கணக்குகளின் படி, கொள்முதல் மூலம் கிடைத்த உள்ளீட்டு வரிப் பயன்பாட்டை விற்பனையில் சரிக்கட்டிய பின்பு மத்திய அரசுக்கு (CGST) நிகர ஜிஎஸ்டி வரியாக 32,493 கோடி ரூபாயும், மாநில அரசின் பங்காக (SGST) 40,257 கோடி ரூபாயும் வசூலானது" என்று தெரிவித்திருந்ததோடு, இது பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறி என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தது.

நீடித்த வளர்ச்சிக்கு செய்ய வேண்டியது 

ஜிஎஸ்டி வரி என்பது அரசுக்கு வரி வருவாய் வளர்ச்சியை உத்தரவாதமாக்குகிறது. இந்த வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் வசூல் அதிகமோ அல்லது குறைவோ, ஆனால் நிலையானதாக இருந்தது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி வசூல் நீடித்த வளர்ச்சியைப் பெற வேண்டுமெனில், வரி விதிப்பு விகிதங்களை மிதமானதாகவும், வரித்தளத்தைப் பரவலாகவும் இருக்குமாறு பார்த்துக்கொண்டால், அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க