சமையல் கூடத்தில் பக்தர்களுக்காக சப்பாத்தி தயாரித்த அமெரிக்க தூதர்!

டெல்லியில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப் கோயிலுக்குச் சென்ற, ஐ.நா-வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, சமூக சமையலறைக் கூடத்தில் சப்பாத்தி தயாரித்தார்.

ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர்

(Photo Credit - ANI)

இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் நிக்கி ஹாலே. இவர், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதராக உள்ளார். இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்த, மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். தூதராகப் பதவியேற்ற பின் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். பயணத்தில், டெல்லியில் உள்ள முகலாயப் பேரரசர் ஹிமாயூன் சமாதி உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களை, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டருடன் சுற்றிப் பார்த்தார். இதற்கிடையில், அமெரிக்கா - இந்தியா இடையிலான நட்புறவை மேம்படுத்துவது, வர்த்தகம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசித்தார் நிக்கி ஹாலே. மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் நேரில் சந்தித்துப் பேசினார். 

ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர்

(Photo Credit - ANI)

இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஒன்பது வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா கோயில்களில் ஒன்றான குருத்துவாரா சிஸ் கஞ்ச் சாஹிப் (Gurudwara Sis Ganj Sahib) சமய வழிபாட்டுத் தலத்துக்குச் சென்றார். அப்போது, 'லங்கர்' உணவுக் கூடத்தில் சக பணியாளர்களுடன் இணைந்து பக்தர்களுக்காக சப்பாத்தி தயாரித்தார். சமைத்த உணவைப் பக்தர்களுக்கும் பரிமாறினார். அதாவது, சீக்கியர்களின் சமய வழிபாட்டுத் தலங்களில் வழிபடவரும் பக்தர்களுக்கு, சமய வேறுபாடின்றி சைவ உணவு சமைக்கப்படும். அதை `லங்கர்' என அழைப்பர். அந்த உணவுக் கூடத்தில் நிக்கி ஹாலே சப்பாத்தி தேய்க்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!