வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (28/06/2018)

கடைசி தொடர்பு:19:08 (28/06/2018)

திலீப்புக்கு எதிராகக் களமிறங்கும் 3 தமிழ் நடிகைகள்! - கேரள நடிகர் சங்கத்தைக் கூட்ட வலியுறுத்தல்

கேரள மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் நாங்கள் வந்துசெல்ல வசதியாக, ஜூலை 13 அல்லது14-ம் தேதி, மலையாள நடிகர்கள் சங்கக் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் என நடிகைகள் ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் நடிகை ரேவதி

பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்  மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' விலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், மோகன்லால் நடிகர் சங்கத் தலைவரானதும் திலீப்பை சங்கத்தில் இணைத்துக்கொண்டார். திலீப் சேர்க்கப்பட்டதற்கு நடிகைகள் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ரம்யா நம்பீசன் உள்பட நான்கு நடிகைகள் ஏற்கெனவே நடிகர் சங்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், நடிகைகள் ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆகியோர் மலையாள நடிகர் சங்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக இருப்போம் என்று சங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. பாலியல் குற்றவாளி என கருதப்பட்டவருக்கு இப்போது சங்கம் ஆதரவு தெரிவிப்பது, ஏற்கெனவே எடுத்த முடிவுக்கு எதிரானது இல்லையா? கடந்த கூட்டம் நடந்தபோது ஊரில் இல்லாததால் நாங்கள் வரமுடியவில்லை. எனவே, கேரளத்துக்கு வெளியே உள்ள நாங்கள், கூட்டத்தில் கலந்துகொள்ள ஏதுவாக, வரும் ஜூலை 13 அல்லது 14ம் தேதியில் மீண்டும் பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.